‘கொலை பண்ண பாக்குறாங்க… அறிவாலயம் போயும் தலைவரை பார்க்க முடியல’ ; மா.செ. மீது கண்ணீர் மல்க திமுக உறுப்பினர் புகார்..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 2:29 pm
Quick Share

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாஷா முத்துராமலிங்கத்திற்கு எதிராக காதர் பாஷா முத்துராமலிங்கமா அல்லது கமிஷன் முத்துராமலிங்கமா என சுவரொட்டியாக டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்களை முகநூல் பக்கத்தில் அப்லோட் செய்த சொந்த (திமுகவினர்) கட்சியினரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட திமுகவை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாஷா முத்துராமலிங்கம் தலைமையிலான ஒரு அணியும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலான ஒரு அணியுமாக பகிரங்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் சில காலங்களாக, அரசு நிகழ்ச்சிகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரே மேடையில் இருவரும் அருகருகே நின்று புன்னகைத்ததுபடியே காட்சி அளித்தாலும், திரைமறைவில் ஒருவருக்கொருவர் மாறி மாறி முதுகில் குத்துவதும், காலை வாரி விடுவதும் போன்ற நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருவதாக சொந்தக் கட்சியினரே கூறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம் 30ம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதில், இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோஷ்டி மோதலில் ரத்தம் சிந்திய உடன்பிறப்புகள் இரண்டு தரப்பினர் மீதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியத்தில் மாணவர் அணி அமைப்பாளராக திமுகவில் பதவி வகிக்கும் T. பசுபதி என்ற கருப்பசாமி பாண்டியன், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திற்கு எதிராக ‘காதர்பாட்சா முத்துராமலிங்கமா இல்லை, கமிஷன் முத்துராமலிங்கமா கள ஆய்வு தேவை’ “இவன் கலைஞரின் முரட்டு பக்தன்” என குறிப்பிட்டு சுவரொட்டியாக ஒட்டப்பட்ட நிலையில்இ பாதர் பாச முத்துராமலிங்கம் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதால், சுவரொட்டிகளை புகைப்படங்களாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தற்போது மாவட்ட அரசியல் மட்டுமின்றி திமுக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும், அவர் தனது முகநூல் பக்கத்தில் எல்லா ஊர்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது தளபதியின் கண்களுக்கும், கட்சி தலைமையின் கண்களுக்கும் தெரிய வேண்டும். எனவே, இவரைப் பற்றி உடனே கள ஆய்வு நடத்த வேண்டும் என ஒட்டியுள்ள சுவரொட்டிகளை புகைப்படமாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் திமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை விமர்சனம் செய்து அபிராமம், கமுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியதாக திமுகவினர் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கருப்பசாமி பாண்டியன் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை திமுக மாவட்ட செயலாளர் அடியாட்களை ஏவி விட்டு தாக்கியதாக அழுதபடியே பேட்டியளித்த சம்பவம் திமுகவினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 360

0

0