ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி படம் : ரூ.1,000 எதிர்பார்ப்பில் அரசு அலுவலகத்துக்கு படையெடுக்கும் மக்கள்… சமாளிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்!

5 July 2021, 7:29 pm
ration card - updatenews360
Quick Share

பிள்ளையார் சுழி

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பணப்பயன் வழங்கும் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார்.

அவருடைய ஆட்சி காலத்தில் முதன்முதலாக 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகளில் பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் ரூ.100 ரொக்கமும் வழங்கப்பட்டது.

இதனால் அந்த ஆண்டு ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசை பெறாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதைப் பெறுவதற்கு நீண்ட கியூ வரிசையில் நின்று மக்கள் வாங்கிச் சென்ற காட்சிகளையும் காண முடிந்தது.

குவிந்த பாராட்டு

2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பண்டிகைக்காக,
அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக, அப்போதைய அதிமுக அரசு வழக்கமான பொங்கல் சிறப்பு தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கமும் வழங்கி மக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது. கொரோனா தொற்று பரவலால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்த தமிழக மக்களுக்கு, இந்தத்தொகை அரு மருந்ததாகவும் அமைந்தது.

pongal gift start - updatenews360

இந்த இரண்டு பெரும் தொகையுமே 2016-ல் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதவை. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை பாராட்டாதவர்களே கிடையாது.

இதுதவிர கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அப்போதைய அதிமுக அரசு 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்கியது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தது. பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா கால நிவாரணத்துக்காக ரேஷன் கடைகளில் அதிமுக அரசு 1000 ரூபாய் வழங்கியது, போதாது. 5 ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருக்கவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா கால நிவாரண நிதியாக மேலும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதன்படி மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2 மாதங்களாக இரு தவணைகளில் இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமே தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது. 2 கோடியே 14 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பணத்தை பெற்றுள்ளனர்.

குடும்பத் தலைவரை நீக்குவதில் ஆர்வம்

இப்படி அரசுகள் வழங்கும் பணப் பயன்கள் ரேஷன் கடைகள் தொடர்ந்து மூலம் கிடைத்து வருவதால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் அதைப் பெறுவதற்கு சமீப காலமாக
தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் கூட ரேஷன் கார்டு கேட்டு தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்ப மனு கொடுத்து வருகின்றனர்.

மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. இந்தத்தொகை பெண்களுக்கு மட்டுமே என்று குறிப்பிடப்பட்டதால் ஸ்மார்ட் கார்டுகளில், குடும்பத் தலைவிகளின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் கார்டுகளுக்கு மட்டுமே 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகவல் தென்மாவட்டங்களில் வேகமாக பரவியது.

Ration_Cards_Tamilnadu_UpdateNews360

இதனால் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகளில் இடம் பெற்றிருந்த குடும்பத் தலைவரின் படத்தை நீக்கிவிட்டு குடும்பத் தலைவியின் படத்தை இடம்பெறச் செய்வதற்காக தாசில்தார் அலுவலகங்களுக்கு பெண்கள் படையெடுக்கத் தொடங்கினர்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் அங்குள்ள இ-சேவை மைய அதிகாரிகளும், ஊழியர்களும் திணறித்தான் போய்விட்டனர். கடந்த வாரத்தில் மட்டும் இப்படி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக உள்ளது. “முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டுக்கான கொரோனா நிவாரண நிதி நிலுவைத்தொகையான 4 ஆயிரம் ரூபாயைத்தான் இப்போது கொடுத்திருக்கிறார்.

யாருக்கெல்லாம் பொருந்தும்

இந்த ஆண்டும் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் கொரோனா வேகமாக பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேர்ந்துள்ளது. எனவே இப்போதும் தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கிட வாய்ப்புள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

இதனிடையே ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவி படம் இருந்தால் மட்டும்தான் இந்த 1000 ரூபாய் கிடைக்குமா, இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் கார்டுகளில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வித குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.

PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். PHH- AAY என்று இருந்தால் மத்திய அரசின் திட்டப்படி 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெறமுடியும்.

How To Apply Smart Ration Card Online in TNPDS website

NPHH கார்டுக்கு அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். NPHH-S என இருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பெற முடியும் . NPHH-NC என இருந்தால் ரேஷன் கார்டை ஒரு அடையாள அட்டை, முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த
முடியும்.

இதுபற்றி தாசில்தார் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக எந்த அறிவிப்பையும் இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற்றுள்ள ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பணப்பயன் வழங்கப்படும் என்பது யாரோ கிளப்பி விட்ட புரளி. எனவே இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இது தொடர்பான முறையான அறிவிப்பை முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் மட்டுமே வெளியிட முடியும். மேலும் இத்திட்டம் பற்றி அறிவிக்க நேர்ந்தால், அதனைப் பெறுவதற்கான தகுதிகளை தமிழக அரசுதான் நிர்ணயம் செய்யும்” என்று குறிப்பிட்டனர்.

Views: - 232

0

0