கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: பட்டுக்கோட்டையில் சிக்கிய கடத்தல்காரி…போலீசாரின் ஸ்மார்ட் வொர்க்..!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 4:08 pm
Quick Share

தஞ்சை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திய பெண்ணிடம் இருந்து பட்டுக்கோட்டையில் போலீஸார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர்கள் குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள். உறவினர்களின் தயவின்றி சுயமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குழந்தை குறித்த கனவுகளுடன் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துமனையில் பெண் குழந்தை பிறந்தது.

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் குணசேகரன் மனைவி மட்டும் குழந்தையை பார்த்து வந்துள்ளார். உதவிக்கு யாரும் இல்லாமல் பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு கணவன் – மனைவி இருவரும் கஷ்டப்படுவதை பார்த்த பெண் ஒருவர் அவர்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக இந்த காதல் தம்பதிக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ராஜலட்சுமி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப்பெண் தனக்கு மயக்கம் வருவதாக கூறி குணசேகரனை அழைத்து வெந்நீர் வாங்கி வரச் சொல்லியுள்ளார்.

குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் இல்லாததைப் பயன்படுத்தி அந்த மர்மப் பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்று உள்ளார். கழிவறையில் இருந்த திரும்பி ராஜலட்சுமி குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வெந்நீர் வாங்கி வந்த கணவரிடம் கேட்டுள்ளார். குழந்தையுடன் அந்தப்பெண் மாயமானதை அறிந்த இருவரும் உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உதவி செய்வதுபோல் நடித்து பெண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தஞ்சை மேற்கு போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் கட்டை பையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும், ஆட்டோவில் குழந்தையை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, பட்டுக்கோட்டையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டடது. மேலும் குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 308

0

0