புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்…!

4 August 2020, 1:17 pm
weather _UpdateNews360
Quick Share

சென்னை: 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்தது. திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பரவலாக கொட்டியது.

இந் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆகையால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் மழை இருக்கும். குறிப்பாக மேற்கு மலை தொடரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும்.

நெல்லை, தென்காசி, தேனி, குமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியசையே ஒட்டி இருக்கும். குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும். கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானியில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அவலாஞ்சியில் 22 சென்டிமீட்டர், கூடலூரில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.