பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுப்பு : வைரலான வீடியோவால் பெட்டிக்கடைக்கு சீல்… ஊர் நாட்டாமை தலைமறைவு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 12:03 pm
Petty Shop Seal - Updatenews360
Quick Share

சங்கரன்கோவில் அருகே உள்ள பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி மாணவர்களை திருப்பி அனுப்பிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் பகுதியில் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கு இருக்கும் பெட்டிக்கடை ஒன்றில் தின்பண்டமாக வந்துள்ளனர்.

அப்போது பெட்டிக்கடைக்காரர் உங்களுக்கு தின்பண்டம் எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார். எங்களுக்கு ஏன் தின்பண்டங்கள் தர மாட்டீங்க என்று மாணவர்கள் கேட்டபோது, ஊர் கட்டுப்பாடு என்று கூறியுள்ளார்.

ஊர் கூட்டம் போட்டு உங்கள் தெருவுக்கு எதுவும் தரக்கூடாது என முடிவு பண்ணியாச்சு என்று கூறி அந்த குழந்தைகளை பெட்டிக்கடைக்காரர் திருப்பி அனுப்புகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் நேற்று முதல் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர் நாட்டாமை தலைமறைவாகியுள்ள நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேச்சு, செய்கை, எழுத்தால் வன்முறையை தூண்டி சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்துதல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் உத்தரவின் பேரில் வருவாய் துறையின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 471

0

0