ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் வந்த ரூ.9ஆயிரம் கோடி : ஒரு மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 11:01 am
Deposit - Updatenews360
Quick Share

ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் வந்த ரூ.9ஆயிரம் கோடி : ஒரு மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இருக்கும் இடத்தில் இருந்தே பணத்தை செலுத்தவோ, பணத்தை வாங்கவோ முடியும். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் வங்கி கணக்கில் ஒன்றிரண்டு சைபர்கள் கூடுதலாக சேர்த்தால் பணம் பறி போகும் நிலையும் ஏற்படும். அதற்கு உதாரணமாக சென்னையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார், கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பருடன் தங்கி வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ராஜ்குமாரின் மொபைல் போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் வந்துள்ளது.

இதனை முதலில் நம்பாத ராஜ்குமார் தனது நண்பர்கள் தான் விளையாட்டாக அனுப்பியுள்ளார்களோ என்று நினைத்துள்ளார். இருந்த போதும் தனக்கு வந்தது ஒன்பதாயிரமா அல்லது 90 ஆயிரமா என குழப்பில் இருந்துள்ளார்.

மேலும் தனது வங்கி கணக்கை சரிவர பயன்படுத்தாத தனது அக்கவுண்டில் 15 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் எப்படி இவ்வளவு பணம் வந்தது எனவும் குழம்பியுள்ளார். கொடுக்கற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என சொல்வார்களே? அது இதுதான் என நினைத்த ராஜ்குமார், பணம் வந்ததை உறுதி செய்ய தனது நண்பருக்கு 21ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

பணமும் தனது நண்பருக்கு சென்ற நிலையில், மீண்டும் தன்னிடம் உள்ள பணத்தை எண்ணியுள்ளார். அப்போது தான் தனது வங்கி கணக்கிற்கு 9ஆயிரம் கோடி ரூபாய் வந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வங்கி கணக்கில் இருந்த 9 ஆயிரம் கோடி பணத்தையும் திரும்ப எடுத்துள்ளனர். இதனை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

வாடகை ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 355

0

0