காமராஜரை வம்புக்கு இழுத்த ஆர்.எஸ்.பாரதி… ஆர்.எஸ்.பாரதிக்கு காங்., எம்பி கொட்டு… திமுக- காங் கூட்டணி முறிகிறதா…?

Author: Babu Lakshmanan
28 September 2022, 7:39 pm
Quick Share

சர்ச்சை ‘ஆர்எஸ் பாரதி’

திமுகவின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி அடிக்கடி அரசியலில் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றை கூறிவிட்டு அதற்காக எதிர்க்கட்சிகளிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாவது கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் பாரதி பேசும்போது, “தலித் சமுதாயத்துக்கு பதவி கொடுத்தவர் தலைவர் கருணாநிதி. உயர் நீதிமன்றத்தில் 6, 7 நீதிபதிகள் ஆதிதிராவிட சமுதாயத்தினர் இருப்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை… நான் இன்னும் பேசினால் கண்டபடி பேசிவிடுவேன். பிரசாந்த் கிஷோர் எங்களுடன் இணைந்தால் அதற்கு உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது? இதெல்லாம் விவாதப்பொருளா? தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் மும்பை சிவப்பு விளக்கு பகுதி போல நடந்து கொள்கின்றன” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் பிறகு இந்த இரண்டு கருத்துக்களுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்ளவும் செய்தார்.

அதன் பிறகும் அவர், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அவ்வப்போது இதுபோல் குதர்க்கமாக பேசுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றபோதிலும் நீதிபதிகள் பற்றிய அவருடைய கருத்தும், தொலைக்காட்சி செய்தி சேனல்கள் குறித்த விமர்சனமும்தான் திமுக எதிர்ப்பாளர்களால் இன்று வரை மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.

காமராஜருக்கு கல்லறை

இந்த நிலையில்தான் மிக அண்மையில் ஆர் எஸ் பாரதி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடைய வைக்கும் அளவிற்கு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

“நம்மை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பதை நான் பட்டியலிட்டு காட்ட விரும்பவில்லை. பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். இன்றுவரை அனைவரும் காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையைத் தான் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” என்று குறிப்பிட்டார்.

இதற்கு விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார்.

“பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி இது போல் பேசுவது அநாகரிகமானது. இது பொய்யான பேச்சு. திமுகவின் திரு. ஆர் எஸ். பாரதி அவர்களின் பேச்சை வன்மையான கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றுமே வெட்டுவேன் என அரசியல் பேசியவர் இல்லை .அவர் புகழ் என்றும் வாழும்” என கண்டித்து இருக்கிறார்.

மக்கள் நிராகரிப்பார்கள்

அதுமட்டுமல்ல அதிர்ந்தே பேசாத தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பியையும் ஆர் எஸ் பாரதியின் பேச்சு ஆவேசமடைய செய்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “நாடும், நாட்டின் மக்களின் வளர்ச்சியே தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர் காமராஜர். சுய விளம்பரத்திற்காக எந்த காரியத்தையும் அவர் செய்ததில்லை. அப்படி கேட்டவர்களை என் தாய் நாட்டிற்காக செய்ததை நான் ஏன் வெளிச்சம் போட்டு காட்டணும் என்று திருப்பி கேட்டவர். எதற்காகவும், யாருக்காகவும், வரம்பு மீறி பேசியதில்லை. நாகரிகமில்லா வார்த்தைகளைப் பேசுவது பெருந்தலைவரின் பழக்கமும் இல்லை.

இப்படி பல அருங்குணங்களை கொண்ட பெருந்தலைவரை நாடாளுமன்ற மேலவையின் திமுக முன்னாள் உறுப்பினர் ஆர் எஸ் பாரதி, திமுகவினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்று காமாராஜர் பேசியதாக கூறியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெருந்தலைவரை நேசிப்பவர்களும், அவர்களது பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள். பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் “என்று சாடியுள்ளார்.

நெட்டிசன்களும் ஆர் எஸ் பாரதியின் கருத்தை கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.

“பெருந்தலைவர் எப்ப இந்த மாதிரி பேசினார் என்பதை ஆர்.எஸ். பாரதி ஆதாரத்தோட
நிரூபிக்கவேண்டும். காமராஜருக்கு சமாதி நீங்க கட்டினீங்கனா கருணாநிதிக்கு எடப்பாடி பழனிசாமிதான் சமாதி கட்டினார்னு சொன்னா ஏத்துப்பீங்களா?..வயசான காலத்துல வாயை வாடகைக்கு விட்டுட்டு திரியவேண்டாம்…” என்று ஒருவரும் இன்னொருவர் “திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிடுச்சுல்ல. இனிமேல் இதெல்லாம் சாதாரணமா வரும். உங்களுக்கு உங்கள் வாய்தான் எதிரி. தமிழகத்தின் வரலாறு இருக்கும் வரை காமராஜர் இருப்பார். உங்க தாத்தா நினைத்தாலும் அவரின் புகழ் மறையாது. அறிவாலயம் ஸ்டார்ட் பண்ணியாச்சா?…” என்று பொங்கியுள்ளார்.

“ஒரு வாரத்துக்கு முன்பு ஆ.ராசா இந்துக்களை இழிவாக விமர்சித்தார். இப்போது ஆர் எஸ் பாரதி அதே பாணியில் கண்டினியு பண்ணுறார். திமுக காரங்களுக்கு இதே வேலையா போச்சு!” என்றும் சில நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

கூட்டணி முறிவா..?

“காமராஜரை பற்றி ஆர் எஸ் பாரதி தெரியாமல் பேசி விட்டார் என்று இதைக் கருத முடியாது. ஏனென்றால், அவர் தனது பேச்சின் பின்பகுதியில் மன்னிக்கவேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்கிறார். இது ஏற்க முடியாத ஒன்று” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“உண்மையிலேயே திமுகவினரின் கைவிரலை வெட்டுவேன் என்று காமராஜர் கூறி இருப்பாரா? என்பது சந்தேகம்தான். மாறாக அவர் உயிருடன் இருந்தவரை திமுக தலைவர்கள் அவருடைய உருவத்தையும், நிறத்தையும் மோசமாக விமர்சித்ததுடன் மேடைதோறும் அவரை கேலி செய்து பேச தவறியதே இல்லை என்பதுதான் உண்மை. எனவே காமராஜர் அப்படி பேசினாரா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆர்.எஸ். பாரதிக்கு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

சரி! எதற்காக அவர் இப்போது இப்படி சொன்னார்? என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 3500 கிலோ மீட்டர் இந்திய ஒற்றுமை யாத்திரையை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின்தான் தொடங்கி வைத்தார். ஆனால் அவர் அப்போது அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

stalin-rahul- updatenews360

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தால் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டிய நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டு இருப்பார். அதை அவர் விரும்பவில்லை.

ஏனென்றால் ஸ்டாலினுக்கும் பிரதமர் பதவி மீது ஒரு கண் உள்ளது. அதேநேரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 4 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்காவிட்டால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் திமுகவிடம் இருப்பது போலவும் தெரிகிறது. இதற்காகத்தான் மறைந்த பெரும் தலைவர் காமராஜரை ஆர்.எஸ்.பாரதி இப்போது தேவையின்றி வம்புக்கு இழுத்து இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது

இந்த விமர்சனத்தை தமிழக காங்கிரஸார் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. அதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முறிவை ஏற்படுத்தும் ஒரு விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது. தவிர சமீப காலமாகவே ஸ்டாலினிடம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆர் எஸ் பாரதிதான் முந்திக்கொண்டு பதில் சொல்லி வருகிறார் என்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதனால் காமராஜரை பற்றி திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்வது தொடர்ந்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்பது நிச்சயம்.

அதேநேரம் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் கூட ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் மூவருக்கும் போட்டியிட தொகுதி ஒதுக்க கூடாது என்று திமுக நெருக்கடி அளிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இந்த மூவருமே மறைமுகமாக தங்களை எதிர்ப்பதாக திமுகதலைமை கருதுவதுதான் இதற்கு காரணம்”என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 461

0

0