விஜய் அரசியல் கட்சி கலாட்டா..!!! ரஜினி இல்லாத களத்தில் மகனை இறக்க படம் காட்டும் எஸ்.ஏ.சி..!!

12 November 2020, 8:55 pm
Vijay - sac - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் வாய்ப்பு தற்போது மிகவும் மங்கியுள்ளதால், அந்த இடத்தில் நடிகர் விஜய் களம் இறங்க வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.சி. சந்திரசேகருக்கு சிலர் ஆலோசனை வழங்கியதால், அரசியல் கட்சி தொடங்க அவர் அவசரம் காட்டியதாகத் தெரிகிறது. வரும் 2021 தேர்தலில் போட்டியிட்டால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனாலும், பல இடங்களில் வெற்றிபெற்று வலுவான அடித்தளம் அமைக்கலாம் என்று சந்திரசேகர் எண்ணியதால், விஜய் சம்மதம் இல்லாமலே அவரது பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார்.

விஜய்க்கும், சந்திரசேகருக்கும் ஏற்பட்ட மோதல் திடீரென்று இப்போது ஏற்பட்டதல்ல என்றும், விஜய்யை அரசியலில் இறக்கும் சந்திரசேகரின் ஆசையால் அது 2011-ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது என்று அவரது ரசிகர் மன்றத்தினர் கூறுகிறார்கள். பத்தாண்டுகளாக இருவருக்கும் இடையே இருந்த மோதல், இப்போது வெளிப்படையாக வெடித்துவிட்டது என்றே விஜய் ரசிகர் மன்றத்தில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

2011-ஆம் ஆண்டு கருணாநிதியின் குடும்பத்துக்கும், விஜய்க்கும் இடையே மோதல் வெடித்தது. 2011-ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று சந்திரசேகர் அறிவித்தார். அதிமுக வெற்றிபெற்றதும் விஜய் மன்றத்தால்தான் அந்த வெற்றி கிடைத்தது என்று சந்திரசேகர் பேசியதால், விஜய் படங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போதே சந்திரசேகரால் நியமிக்கப்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் மாற்றிவிட்டார் என்றும், சினிமா கால்ஷீட், சம்பளப் பேச்சுகளுக்கும் தனி உதவியாளர்களை அமர்த்திக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. தந்தையும் மகனும் பேசிக்கொள்வதும் அப்போதில் இருந்தே குறைந்துவிட்டது என்று தெரிகிறது.

சந்திரசேகருக்கு முப்பது ஆண்டுகளாக விஜய்யை அரசியல் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சந்திரசேகர் இயக்குநராக இருக்கும்போதே ‘சட்டம் ஒரு இருட்டறை’ போன்ற அரசியல் சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்துத்தான் பெரும்பாலான படங்களை இயக்கினார். அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதியுடனும் நெருக்கமானார். கருணாநிதி கதை-வசனத்தில் ‘நீதிக்கு தண்டனை’ போன்ற படங்களையும் இயக்கினார். அப்போது அவருக்கு அரசியலில் மிகவும் ஈடுபாடு இருந்தது. அவரது அரசியல் படங்களில் நடித்த விஜய்காந்த் அரசியல் கட்சி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவிவரை நெருங்கியதையும் சந்திரசேகர் பார்த்தார்.

Vijay Dad - Updatnews360

தனது மகன் விஜய் நடித்த முதல் படத்தையே ‘நாளைய தீர்ப்பு’ என்ற தலைப்புடன் எதிர்காலக் கண்ணோட்டத்துடன் இயக்கினார். விஜய்காந்த் எப்படி தனது ரசிகர் மன்றத்தைக் கட்டியமைத்து, அதை அரசியல் கட்சி தொடங்கப் பயன்படுத்திக்கொண்டார் எனபதையும் பார்த்த சந்திரசேகர், விஜய் ரசிகர் மன்றம் அமைப்பதிலும் பெரும் பங்கு வகித்தார். ஆரம்பகால விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரும் சந்திரசேகரால் நியமிக்கப்பட்டு அவருக்கே விசுவாசமாக இப்போதும் இருக்கின்றனர். அவர்களையே தற்போது விஜய் பெயரில் தொடங்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு விஜய்காந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி எம்.எல்.ஏ. ஆனதையும் பார்த்த சந்திரசேகர், விஜய் தலைமையில் 2008-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தார். அதே நேரத்தில் இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான கட்சி என்று குற்றம்சாட்டப்படும் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித்தலைவராக இருந்த ராகுல்காந்தியை, விஜய் சந்தித்தது அந்த உண்ணாவிரதத்தால் தமிழின உணர்வாளர்களிடம் பெற்ற மதிப்பைக் கெடுப்பதாக அமைந்தது. ஆனால், விஜய் அப்போது காங்கிரசின் சேராமல் தவிர்த்தார்.

தற்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த ஜெ.ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத சூழலில் விஜய்யை அரசியலில் இறக்கிவிட வேண்டும் என்று சந்திரசேகர் திட்டமிட்டதாகத் தெரிகிறது. அரசியலில் இறங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்ததால் அவருக்கு ஆதரவாக விஜய்யைப் பேசவைத்து விஜய் ரசிகர்களையும் அரசியல் களத்தில் இறக்கலாம் என்று சந்திரசேகர் நினைத்தார். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரும் வாய்ப்பு தற்போது மங்கியதால் அதைப் பயன்படுத்தி 2021 தேர்தலில் நேரடியாக விஜய்யை களத்தில் இறக்கலாம் என்றும் கணிசமான இடங்களை வெல்லலாம் என்றும், அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கலாம என்றும் அவர் கருதியதால் அவசரமாக விஜய் பேரில் அரசியல் கட்சியைப் பதிவு செய்துள்ளார்.

மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே அதை அரசியல் பிரவேசத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே சந்திரசேகரின் எண்ணமாகும். ஆனால், இப்போது அரசியலில் இறங்கினால் வெற்றிபெற முடியாது என்றும் இருக்கும் பணமும் காலியாகி சினிமா மார்க்கெட்டும் சரியும் என்று விஜய் கருதியதால் சந்திரசேகரின் திட்டத்தை விஜய் ஏற்கவில்லை. சினிமாவில் நன்றாக சம்பாதிக்கும்போது அதை இழக்க விஜய் விரும்பவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அரசியலில் இறங்கும் எண்ணம் விஜய்க்கும் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். விஜய்க்கும் சந்திரசேகருக்கும் இடையே சமரசப்பேச்சு நடப்பதாகவும் விரைவில் சமரசம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Views: - 43

0

0