மணல் கடத்தல் வாகனங்களை ஒப்படையுங்க…பிரச்சனை மேலிடம் வரை போகிவிட்டது : திமுக நிர்வாகியிடம் கெஞ்சிய பெண் டிஎஸ்பி!!

15 July 2021, 8:10 pm
trichy sand theft 2- updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக, போலீசாருக்கு 13ம் தேதி அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், முக்கிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முத்தபுடையான்பட்டி அருகே சட்டவிரோத கும்பல் ஒன்று மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிரடியாக அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜே.சி.பி., மற்றும் இரு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, டிரைவர்கள் மனோகர், பவுன் சேகர், கார்த்திகேயன், ஆகிய மூவரையும் பிடித்து மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த மணல் திருட்டில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, கைது செய்யப்பட்ட மூவரிடம் கொடுத்து போலீசார் அனுப்பி வைத்து விட்டனர்.

அதேவேளையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களையும், நபர்களையும் விடுவித்தது தொடர்பாக புகார் டிஜிபி அலுவலகம் வரை சென்றதால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது. உடனடியாக, விடுவிக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை மீண்டும் கைது செய்ய மணப்பாறை டி.எஸ்.பி., பிருந்தாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியிடம் பேசினார். அவரோ, ‘வாகனங்களையும், டிரைவர்களையும் ஒப்படைக்க முடியாது; உங்களால் முடிந்ததைப் பாருங்கள்’ என அடாவடியாக கூறிவிட்டார்.

KN nehru - updatenews360

இதனால், அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் அன்பழகனுடன், முத்தபுடையான்பட்டியில் உள்ள ஆரோக்கிய சாமி வீட்டுக்கு சென்று, டிரைவர்களையும், வாகனங்களையும் ஒப்படைக்கும்படி, ஆரோக்கிய சாமியிடம் கெஞ்சினார். ஆனால், திமுக நிர்வாகி அசைந்து கொடுக்கவில்லை. எதையும் ஒப்படைக்க முடியாது; உங்களால் முடிந்ததைப் பாருங்கள்’ என மீண்டும் கறாராக பேசி உள்ளார். மேலும், அமைச்சர் நேருவின் பெயரையும் பயன்படுத்தி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மணல் கடத்தல் விவகாரத்தில் டிஜிபி நேரடியாக தலையிட்டு விட்டதால், வாகனங்களையும், ஓட்டுநர்களையும் ஒப்படைக்குமாறு திமுக நிர்வாகியிடம் டிஎஸ்பி பிருந்தா மன்றாடியுள்ளார். இதனால், ஒரு முடிவுக்கு வந்த ஆரோக்கியசாமி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக பழைய வாகனங்களை ஒப்படைப்பதாக இறங்கி வந்துள்ளார்.

ஆனால், பிரச்சனை வெட்டவெளிச்சமாகிவிட்டதால் வேறு வாகனங்களை பறிமுதல் செய்து சென்றால், சிக்கல் ஆகி விடும் எனக் கூறி, அதே வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். டிஎஸ்பி பிருந்தா கோரிக்கை வைப்பதும், திமுக நிர்வாகி ஆரோக்கியசாமி மறுப்பதும் என சுமார் 4 மணிநேரங்கள் ஓடிவிட்டன.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பழைய வாகனங்களை வாங்கிச் செல்லுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தி, பிரச்சனையை முடித்து வைத்துள்ளார். வேறு வழியின்றி போலீசாரும் சம்மதித்தனர். ஆனால், ஓட்டுநர்களை ஒப்படைக்க முடியாது என, ஒரே அடியாக ஆரோக்கியசாமி மறுத்து விட்டார்.

இதையடுத்து மணல் கடத்தியதாக ஒரு ஜே.சி.பி., மற்றும் டிப்பர் லாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மனோகர், பவுன் சேகர் ஆகிய இரு டிரைவர்கள் தலைமறைவு எனவும், உரிமையாளர்கள் தலைமறைவு என்றும் வழக்கு பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சியினரின் அராஜக செயல்களை தடுக்க முயன்று, வீணாக மாட்டிக் கொண்டோமா…? என்ற எண்ணம் போலீசாருக்கு எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தலின் போது தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சிக்கு வந்தால் மாட்டு வண்டிகளை ஆற்றுக்கு ஓட்டிச் செல்லலாம் என மணல் கடத்தலுக்கு நேரடியாகவே க்ரீன் சிக்னல் கொடுத்த நிலையில், இதுபோன்ற மணல்திருட்டுகள் எந்த வித தடையும் இல்லாமல் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மணல் கடத்தலில் திமுக நிர்வாகியே நேரடியாக ஈடுபட்டிருப்பதால், குற்றம் செய்தவர்களை கைது செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்ய கதற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை கண்டு போலீசாரே அதிருப்தியடைந்துள்ளனர்.

stalin cm - updatenews360

ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ள நிலையிலும், ஆரோக்கிய சாமி போன்ற நபர்கள் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதுடன், தி.மு.க., ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 268

0

0