மக்கள் நலக்கூட்டணி பாணியில் அதிரடி… தினகரன் தலைமையில் புதிய அணி!!சசிகலாவின் வியூகம் கைகொடுக்குமா?

25 February 2021, 2:27 pm
Sasikala - dinakaran - updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் தண்டனை அனுபவித்த சசிகலா சிறைவாச காலம் முடிந்து கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். எனினும் அதற்கு முன்னதாக, அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் பெற்றார்.

இதன் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி பெங்களூருவில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வும் எடுத்தார். அதனால் அவர் திட்டமிட்டபடி சென்னை திரும்புவது தாமதமானது.

sasikala - updatenews360

பெங்களூருவில் இருந்து அவர் கடந்த 9-ந் தேதி சென்னை திரும்பினார். அவர் தமிழகம் வந்ததும் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என்று சசிகலாவின் அக்காள் மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நினைத்திருந்தனர்.

“இதோ சசிகலா அதிமுக கொடியோடு காரில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். இனி நடக்க வேண்டியதை அவரே கவனித்துக் கொள்வார்” என்றும் ஸ்டாலின் கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்காததில் தினகரனுக்கும், ஸ்டாலினுக்கும் பெருத்த ஏமாற்றம்தான். சென்னை தி.நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்த பின்பு சசிகலா மிகவும் அமைதியாகி விட்டார். உடனே திமுக ஆதரவு ஊடகங்கள், புலி பதுங்குவது பாய்வதற்குத்தான், அடிபட்ட புலி சும்மா விடாது என்றெல்லாம் உதார் காட்டின.

ஆனால், பிரதமர் மோடி சென்னைக்கு வந்து சென்ற பின் அதுவும் அடங்கிப் போனது. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை அகற்ற சசிகலா சபதம் எடுப்பார் என்றும் வதந்திகள் கிளம்பின. அதுவும் பொய்த்துப் போனது.

இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தனது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஒரு சில நிமிடங்கள் பேசினார்.

Sasikala Admit- Updatenews360

அவர் பேசுகையில், “ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இதில் நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன். விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க வருவேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த அழைப்பு தொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “சசிகலாவும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் உள்ளிட்ட 32 பேரும் புரட்சித்தலைவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து அவர் சிறை செல்லவும் காரணமாக இருந்தனர். இப்போது அவர்களே ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகளே வாருங்கள் என்கிறார்கள். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ரத்தத்தின் ரத்தங்கள்தான் உண்டு. உடன்பிறப்புகள் திமுகவில்தான் இருக்கின்றனர். ஒருவேளை திமுகவினரை ஒன்றாக இணைவோம் வாருங்கள் என்று சசிகலா அழைக்கிறார் போலும். ஆகையால் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுடையது.

திமுகவில் இருந்து நீக்கப்பட்டு பல்வேறு அவமானங்களையும், சோதனைகளையும் சந்தித்து அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி தமிழ் நாட்டில் 10 ஆண்டுகள் கோலோச்சிய எம்ஜிஆரையும், அவர் பின்னால் திரண்ட லட்சோப லட்ச தொண்டர்களையும் சசிகலா எப்படி மறந்து போனார் என்பது ஆச்சரியம்தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே
அரசியலில் இருப்பதை மனதில் வைத்து எம்ஜிஆர் பெயரை திட்டமிட்டே சசிகலா தவிர்த்தாரா?” என்றும் அந்த நிர்வாகி கேள்வி எழுப்பினார்.

seeman - updatenews360

இந்த நிலையில், சசிகலாவை அவருடைய தி.நகர் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், அவருடைய மனைவியும் கட்சியின் பொருளாளருமான நடிகை ராதிகா ஆகியோரும் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். இவர்கள் மூவரும் மற்ற நாட்களில் வந்து சென்றால் ஊடக வெளிச்சம் கிடைக்காது என்பதற்காக சரியாக ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

அதேநேரம் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தன்னை அதிமுக நிர்வாகிகள் சிலராவது வந்து சந்திப்பார்கள் என்று சசிகலா நம்பியிருந்தாராம். அதுவும் நடக்கவில்லை. இதனால் அதிமுகவை மீட்டெடுப்பது இனி ஒருபோதும் நடக்காத காரியம் என்பதை உணர்ந்துகொண்டதாக கூறப்படும் சசிகலா புதிய வியூகம் ஒன்றை வகுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தனது அக்காள் மகன் தினகரன் நடத்தும் அமமுகவில் நாம் தமிழர் கட்சி, அதிமுக கூட்டணியில் சற்று அதிருப்தியில் இருக்கும் தேமுதிக சமத்துவ மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு சில கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கடந்த தேர்தலில் கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டதுபோல் தினகரன் தலைமையில் ஒரு புதிய அணியை அமைக்க சசிகலா முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை சீமான், சரத்குமார் ஆகியோருடன் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

sarathkumar - updatenews360

இப்படி ஒரு அணி அமைந்தால் தேர்தலில் தோற்றால் கூட ஓரளவு வாக்கு சதவீதத்தை அமமுக கூட்டணியால் பெறமுடியும். அதன் பிறகு அதிமுகவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சசிகலா நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப் பட்டுள்ளது.

தினகரன் தங்களுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கி தருவார், தேர்தல் செலவுக்கும் எந்த சிக்கலும் இருக்காது என்று சீமானும், சரத்குமாரும் நம்புவதாக தெரிகிறது.

இதனால் வலுவான மூன்றாவது அணி அமைக்கப் போவது நடிகர் கமல்ஹாசனா, டிடிவி தினகரனா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்திருப்பதென்னவோ நிஜம்!

Views: - 63

0

0