சசிகலாவின் தமிழக வருகைக்கான தேதியில் மாற்றம் : ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு..!!

4 February 2021, 3:42 pm
sasikala - updatenews360
Quick Share

சென்னை : சொத்து குவிப்பு வழக்கு சிறை தண்டனைக்கு பிறகு, பெங்களூரூவில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரூ அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில், அவர் ஜன., 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், விடுதலைக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்படுவதாக சிறை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கடந்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகி, பெங்களூரூவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதனிடையே, சசிகலா வரும் 7ம் தேதி தமிழகம் வர இருப்பதாகவும், உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சசிகலாவின் தமிழகம் வருகை 7ம் தேதியில் இருந்து 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மீண்டும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏன்..? எதற்காக..? என்ற விபரம் வெளியாகாத நிலையில், 8ம் தேதி காலை 9 மணிக்கு அவர் பெங்களூரூவில் இருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்! ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம்!,” என அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, சசிகலா 7ம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன், ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கோரி மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0