‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பிற்கு காயங்களே காரணம்’ : சி.பி.ஐ.யின் பதிலை ஏற்று காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
25 August 2020, 4:31 pmமதுரை : சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஜாமீன் கோரிய 3 பேரின் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, சம்பவத்தன்று பணியில் இருந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை இரட்டை கொலையாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஒருவரான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி காவலர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளம் தந்தை, மகனின் உயிரிழப்பிற்கு அவர்களின் உடலில் காயங்கள்தான் காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும் சி.பி.ஐ. தெரிவித்தது.
மேலும், விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கால தாமதம் ஏன்..? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, விசாரணைக்கு வந்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், விசாரணையை முழுமையாக முடிக்க முடியவில்லை என சி.பி.ஐ. தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என உயிரிழந்த
ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.