தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய தகவல்…
9 September 2020, 10:23 pmவிழுப்புரம்: பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளிதிறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
வானூர் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு துவங்கப்படும் மாணவர் சேர்க்கையும் இந்தாண்டே நடத்தப்படும். ரூ.28 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றும் பணி துவங்கப்படும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவர்களது பெற்றோரின் மனநிலை என்ன என்பதை அறிந்த பின்பு, தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்ற பிறகும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார். கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், அரசின் நிலைப்பாட்டை, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தெளிவுப்படுத்தியுள்ளார். இதில் யுஜிசியின் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அரசு சொன்ன பிறகும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
0
0