வாக்குறுதி நிறைவேற்றியதாக “நல்லாட்சியின்‌ நாயகன்‌” பட்டமா? வெட்கக்கேடாக உள்ளது.. மனசாட்சி உறுத்தலையா முதல்வரே? ஸ்டாலினுக்கு சீமான் சரமாரி கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 10:01 pm
Stalin Seeman - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

அதில் மிக முக்கியமாக திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும்1000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு, உள்ளூர் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா கால நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு மிகாமல் அடமானம் வைத்த அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாகவும் ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் திருமண உதவித் தொகையான 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் கூறப்பட்டிருந்தன. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ 208 வாக்குறுதிகள் நிறைவேற்றயதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றில்‌ பறக்கவிட்டத்‌ தேர்தல்‌ வாக்குறுதிகள்‌ பல இருக்கையில்‌, அவற்றை நீறைவேற்றிவிட்டதாகப்‌ பெருமைப்பட்டு கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என சீமான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ஜனநாயகத்தால்‌ நிறுவப்படும்‌ ஒர்‌ அரசை நாட்டின்‌ குடிகள்தான்‌, மதிப்பிட வேண்டும்‌. ஆட்சி முறைமைகளில்‌ நன்மைகள்‌ நிகழ்ந்தால்‌ அவர்களாகத்தான்‌ போற்றிக்‌ கொண்டாட வேண்டும்‌.

ஆனால்‌ இங்கோ, “நூறாண்டு போற்றும்‌ ஒராண்டு சாதனை” என ஆட்சியாளர்களே அரசுப்‌ பணத்தில்‌ விளம்பரம்‌ செய்துச்‌ சுயதம்பட்டம்‌ அடிக்கும்‌ கேலிக்கூத்துகளும்‌, “நல்லாட்சியின்‌ நாயகன்‌” எனத்‌ தங்களுக்குத்‌ தாங்களே பட்டம்‌ சூட்டிக்கொள்ளும்‌ நாடகங்களும்‌ நாள்தோறும்‌ அரங்கேறுகின்றன.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றிடாத ஆட்சியாளர்‌
பெருந்தகைகள்‌, நாட்டையே மாற்றிப்‌ படைத்து, நல்லாட்சி தந்து கொண்டிருப்பதாகக்‌
கூறுவது வெட்கக்கேடானது.

தான்‌ அளித்த தோதல்‌ வாக்குறுதிகளை எல்லாம்‌ நிறைவேற்றிவிட்டதாக தற்பெருமையோடு கூறுகிறார்‌ மாண்புமிகு முதல்வர்‌ ஐயா ஸ்டாலின்‌ அவர்கள். எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள்‌ முதல்வரே? அவற்றை எல்லாம்‌ மக்கள்‌ அறிவார்களா?

நீட்‌ தோவுக்கான விலக்கு மாநில அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்திருந்தும்‌, புதிய சூத்திரம்‌ வைத்திருக்கிறோம்‌; ரகசியத்திட்டம்‌ வைத்திருக்கிறோம்‌; அவற்றால்‌, நீட்‌ தேர்வுக்கான விலக்கைப்‌ பெறுவோம்‌ என புறமேடைதோறும்‌ முழங்கினிர்கள்‌. உங்கள்‌ ஆட்சியில்‌ இதோ இரண்டாவது நீட்‌ தேர்வும்‌ வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம்‌, இரகசியமெல்லாம்‌? அவையும்‌ மறந்துபோனதா? முதல்‌ சட்டமன்றக்‌ கூட்டத்தொடரில்‌ தீர்மானம்‌ இயற்றி, நீட்‌ தேர்விலிருந்து விலக்கு பெறுவோம்‌ எனத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ கூறிவிட்டு, சட்ட தீர்மானம்‌ இயற்றவே மூன்று மாதங்கள்‌ காலங்கடத்தினீர்கள்‌. நீட்‌ தேர்வு அச்சத்தால்‌ அடுத்தடுத்து மாணவப்‌ பிஞ்சுகள்‌ கருகி
வரும்போதும்‌ கள்ளமெளனம்‌ சாதிப்பதுதான்‌ நீங்கள்‌ கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா? என விமர்சித்துள்ளார்.

Views: - 149

1

0