2024 தேர்தலில் நடிகர் விஜய்யுடன் ரகசிய டீலிங்?…திருமாவால் திமுக ‘திடுக்’

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 7:55 pm
Thiruma Vijay - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என்ற மனக்குமுறலில் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதுபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் இரண்டு கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன.

திருமாவளவன் அதிருப்தி

கடந்த 9-ம் தேதி நாங்குநேரியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி இருவரையும்ஒரு மாணவர் கும்பல் இரவில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி சாய்த்தது. இவர்கள் இருவருமே பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வேறொரு குறிப்பிட்ட சாதியினராக இருந்ததால் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

“இந்த சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?… தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரா?” என்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

திமுகவை கேள்வி கேட்ட கூட்டணி கட்சி

திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் மாநில இளைஞரணி தலைவரான சங்கத்தமிழன் இன்னும் ஒரு படி மேலே சென்று “தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவத்திற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே பதவி விலகவேண்டும். பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து அவரிடம் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அன்பில் மகேஷ் அதைக் கண்டுகொள்ளவே இல்லை” என்று கடுமையாக போட்டு தாக்கினார்.

அவருடைய இந்த காட்டமான கருத்து, திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இது கூட்டணியில் இருந்து மன வருத்தத்துடன் விசிக வெளியேறி விடுமோ என்ற கேள்வியையும் எழுப்பியது. பின்னர் அந்த பேச்சு அப்படியே அமுங்கிப் போனது.

இந்த நிலையில்தான் நாங்குநேரி பதற்றம் தணிவதற்குள், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவரான ஹரி பிரசாத் கடந்த 18ம் தேதி தனது வீட்டில் இருந்தபோது அவரை ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் வீடு புகுந்து கடுமையாக தாக்கியுள்ளது.

இவரை தாக்கியதும் வேறொரு சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனாலும் விசிகவின் கொதி நிலை உச்சத்தை எட்டியது. சமூக நீதி பேசும் திமுக ஆட்சியிலேயே பட்டியலின மாணவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுவதால் விசிக தலைவர் திருமாவளவன் மனம் நொந்துபோய் இருக்கிறார் என்கிறார்கள். அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக இருக்கும்போதே இந்த அட்டூழியம் நடப்பதை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசியலுக்கு நுழைந்த விஜய்?

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் புதியதொரு அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்ற செய்தி அண்மைக்காலமாக காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதற்கு ஆயத்தமாகும் வகையில்தான் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தனது பிறந்தநாளுக்கு முன்பாக அவர் பரிசுகளை வழங்கினார் என்றும் தேர்தலில் மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடவேண்டும் என மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அட்வைஸ் செய்தார் என்றும் கூறுகிறார்கள்.

விஜய்க்கு வாழ்த்து கூறிய திருமாவளவன்

நடிகர் விஜய்யின் இந்த செயல்பாடுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை வெகுவாக ஈர்த்து விட்டது. அதனால்தான் அவருடைய பிறந்தநாளான ஜூன் 22 ம் தேதி விஜய்க்கு போன் செய்து அவர் வாழ்த்து தெரிவிக்க முயன்றார். ஆனால் அப்போது விஜய் தனது லியோ படப்பிடிப்பில் இருந்ததால் அவருடைய உதவியாளரிடம் தொடர்பு கொண்டு நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவே போன் செய்தேன். விஜய்யின் அரசியல் முயற்சிகளுக்கு, முன்கூட்டியே வாழ்த்து சொன்னதாக கூறி விடுங்கள்’ என திருமாவளவன் தெரிவித்து இருக்கிறார்.

இப்படி அவர் விஜய்க்கு அரசியல் ரீதியான பார்வையுடன் வாழ்த்து சொன்னது திமுக தலைமையை கொந்தளிக்க வைத்து விட்டது.

அதேபோல கடந்த 17ம் தேதி, தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடிய திருமாவளவனுக்கு நடிகர் விஜய் போன் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சுமார் பத்து நிமிடம் வரை மனம் விட்டு பேசியும் உள்ளனர். “உங்கள் அரசியல் வருகை வரவேற்புக்குரியது. உங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்’ என, அப்போது திருமாவளவன் கூறியதாக வெளியான தகவலும், திமுக தலைமைக்கு மேலும் எரிச்சலை கொடுத்துள்ளது.

“நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவருடைய இலக்கு 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான். ஆனாலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் இறங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் விஜய் இயக்கத்திற்கு வரவேற்பு

“ஏனென்றால் உள்ளாட்சித் தேர்தலின்போதே விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டு 165 பேர் வார்டு உறுப்பினர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அந்தந்த பகுதிகளில் சொந்த செல்வாக்குள்ள விஜய் ரசிகர்கள் சுயேச்சைகளாக போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் 5 நாடாளுமன்ற தொகுதிகள் வரை அவர்கள் போட்டியிடக் கூடும். திமுக கூட்டணியில் விசிக நிற்கும் தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள். அதேநேரம் அவர்கள் களமிறங்கும் தொகுதிகளில் விசிக தொண்டர்கள் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள்.

இது தங்களுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைப்பதால்தான், உதயநிதியின் அரசியல் வருகையையும், அவரது முன்னேற்றத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் நடிகர் விஜய் அரசியலுக்கு வரத் துடிக்கிறார் என்று திமுக தலைமை புலம்புகிறது.

திகைத்த திமுக

தங்கள் கூட்டணிக்கு அஸ்திவாரம் போடுவது போல்தான் விஜய்-திருமா இருவரும் மாறி மாறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றனரோ என்ற அச்சம் திமுக அமைச்சர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்திருப்பதை உணரமுடிகிறது.

ஏனென்றால் விஜய் ரசிகர்களில் பெரும்பாலானோர் திமுகவில் உள்ளனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அவர்களின் ஓட்டுகள் விஜய் பக்கம் திரும்பலாம். அது எதிர்காலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தேர்தல் களத்தில் பெரும் சவாலாக உருவெடுக்கும் என்றும் திமுக தலைமை கருதுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கும் வாய்ப்புகளே அதிகம்.
அதேநேரம் நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கும் என்பதும் உறுதி.

2026ல் உருவாகும் புதிய கூட்டணி

விசிகவின் ஆதரவு இல்லை என்றால் 2021 தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றி இருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அதனால் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சிக்குள்ள தனித்தன்மையையும், மரியாதையையும் விட்டுக் கொடுக்க திருமாவளவன் ஒருபோதும் விரும்பமாட்டார்.

மேலும் தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளை திமுக அரசு கண்டும் காணாததுபோல நடந்து கொள்கிறது. அதை அம்மக்களின் பாதுகாவலன் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் திருமாவளவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவரது கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள்தான் இதுபற்றி ஆவேசமாக பேசுகிறார்கள்.

எனவே இதுபோன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய் தொடங்கும் கட்சியுடன் 2026-ல் விசிக கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள்தான் உருவாகும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் கூறுகின்றனர். இதுவும் சிந்திக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!

Views: - 256

0

0