ஓட்டு போட உங்க ஊருக்கு போங்க…! வட மாநிலத்தவரை சீமான் மிரட்டுகிறாரா…? யோசனையை திமுக அரசு ஏற்குமா…?

Author: Babu Lakshmanan
2 November 2022, 2:30 pm
Quick Share

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ், தமிழர் நலன் என்று அவ்வப்போது கொந்தளித்து முழுக்கமிட்டாலும் கூட அவருடைய கருத்துகள் பெரும்பாலும் கேலி பொருளாகவே மாறிவிடுகிறது. அதை அவர் உணர்ந்து கொண்டது போலவும் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பல நேரங்களில் உள்ளாகியும் விடுகிறார்.

இது அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது என்ற விமர்சனம் எழுந்தாலும் அதையெல்லாம் சீமான் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இந்த நிலையில்தான், அவர் புதிதாக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து அண்மையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

அப்போது பேசிய சீமான், “இந்தி மொழியை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தவில்லை. இந்தியை கட்டாயமாக திணிப்பதை எதிர்த்துதான் நடக்கிறது. இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல். இந்தி தெரிந்த மாநிலங்களில் அந்த மொழியை கொண்டாட வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தியை கொண்டாட நினைத்தால், அது நடக்கவே நடக்காது.

இந்தி படித்தால் வட மாநிலத்தில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள். அப்படியென்றால் 2 கோடி வட மாநிலத்தவர்கள் ஏன் தமிழகத்திற்கு வந்து வேலை பார்க்கிறார்கள் உழைப்பையும், வேலையையும் நாம் தவற விடுவதால் அவர்கள் வந்து புகுந்து விடுகிறார்கள். இப்படியே போனால் நாம் அடிமையாகி விடுவோம்.

எனவே வட மாநிலத்திலிருந்து இங்கே வேலைக்கு வருபவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திமுக அரசு வழங்கக் கூடாது. எங்களது அடுத்த கட்ட போராட்டம் தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்பதை மையமாகக் கொண்டுதான் இருக்கும்.

தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்கள் தங்கள் வாக்குகளை அவர்கள் மாநிலத்தில் சென்று செலுத்தி வரட்டும். அதேபோல், தமிழர்கள் இங்கு வந்து வாக்கு செலுத்தும் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றும் அவர் ஆவேசம் காட்டினார்.

தேர்தல் தொடர்பான விஷயங்களில் தமிழர்களையும், வட மாநிலத்தவரையும் சீமான் பிரித்துப் பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்ற சிக்கலான கேள்வியைத்தான் எழுப்புகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவும் இதேபோல ஒரு கருத்தை திமுக அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.

“தமிழகத்தில் அதிகரித்து வரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் வேலைக்கு ஒட்டிய வயிரோடு வருகிறான், குறைந்த கூலிக்கு வருகிறான் என்று சிலர் வக்காலத்து வாக்குவதை பொருட்படுத்தாமல், நமது மாநிலத்திற்கு வரும் வட மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று ஆகியவை வழங்குவதை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று கொந்தளித்து இருந்தார்.

அதேபோல்தான் சமீபத்திய சீமானின் காட்டமான பேச்சும் உள்ளது.

“சீமானின் கருத்து மறைமுகமாக திமுக ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கோரிக்கைகளாகத்தான் உள்ளன. அவருடைய யோசனைகளும் இந்திய ஒற்றுமையை சிதைக்கும் விதமாக உள்ளன. எந்த காலத்திலும் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத விஷயங்களை தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசி அவர்களை குழப்பத்திற்கும் சீமான் தள்ளி இருக்கிறார்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“2 கோடி வட மாநில இளைஞர்கள் வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்று சீமான் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஏனென்றால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வேலை தேடி வந்த வடமாநில இளைஞர்கள் பற்றி 2021-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் மட்டுமே இருப்பது தெரிய வந்தது.

இந்த எண்ணிக்கையில் மேலும் 20 லட்சத்தை கூட்டினாலும் கூட ஒன்றரை கோடி பேர் என்ற அளவில்தான் இருக்கும். தமிழகத்தில் மட்டும் இது 35 லட்சம் முதல் 40 லட்சம் இருக்க வாய்ப்புண்டு. இவர்களில் ஒரு சில லட்சம் பேர் மனைவி, குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் அதிகபட்சமாக 50 லட்சம் முதல் 55 லட்சம் பேர் வரை தமிழகத்தில் இருக்கலாம்.

இவர்கள் அனைவருமே தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று வாக்களிக்க திமுக அரசு ஏற்பாடு செய்தால் 5 ஆண்டுக்கு ஒரு முறை தமிழக அரசுக்கு 500 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை தேவைப்படும். அதே நேரம் நிரந்தரமாக குடியேறும் வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டால் அது சட்டரீதியாக தமிழக அரசுக்கு பெரிய தலைவலியையும் ஏற்படுத்தும்.

இதேபோல மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழகம் சென்றுதான் ஓட்டு போட வேண்டும் என்ற நிலை உருவாகும்போது அதிலும் பாதகம்தான் ஏற்படும்.

ஏனென்றால் மராட்டிய மாநிலத்திற்கு வேலை தேடி சென்ற தமிழர்கள் சுமார் 27 லட்சம் பேர் அங்கே வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 1967 முதல் 1977 இடையேயான கால கட்டத்தில் பிழைப்பு தேடி மும்பைக்கு சென்றவர்கள்.

அப்போது அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களின் மும்பை படையெடுப்பை பார்த்து பயந்துபோய் வாக்குரிமை, சலுகைகள் கொடுக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தவில்லை. அந்த மாநிலத்தில் இன்று தமிழர்கள் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னி பிணைந்தும் விட்டனர்.

இதுதவிர அப்போது குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வேலை தேடி சென்ற தமிழர்கள் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் இருக்கும்.

கர்நாடக மாநிலத்தில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் 23 லட்சம் பேர் அந்த மாநிலத்தில் வசிக்கின்றனர். இதற்கடுத்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 11 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.

நமது இன்னொரு பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு வேலை தேடி சென்ற தமிழர்கள் 6 லட்சம் பேர் ஆவர். இப்படி சுமார் 70 லட்சம் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல்வேறு மாநிலங்களில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் குறைந்தபட்சம் 55 லட்சம் பேர் தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றவர்கள் என்று வைத்துக் கொண்டால் கூட அவர்கள் தமிழகத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்து செல்ல திமுக அரசு மேலும் 550 கோடி ரூபாயை செலவிட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகும். அதுவும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு தனித்தனியாக தேர்தல் நடந்தால் குறைந்தபட்சம் 2000 கோடி ரூபாயிலிருந்து அதிகபட்சமாக, 2500 கோடி ரூபாய் வரை தமிழக அரசுக்கு தேவைப்படும்.

ஏற்கனவே கடும் நிதிச்சுமையில் உள்ள திமுக அரசுக்கு சீமானின் யோசனை தேவையற்ற ஒன்று.

அதேநேரம் தமிழக இளைஞர்களில், குறிப்பாக படித்தவர்களில் பெரும்பாலானோர்
வேலையே கிடைக்காத நிலையில் கட்டுமான தொழில் தொடர்பான வேலைகளுக்கு செல்லவே இன்று தயக்கம் காட்டுகின்றனர். வங்கிகள் மூலம் கடன் பெற்று, சுயமாக தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை.

உடலை வருத்தி வேலை பார்ப்பது என்றாலே அது தங்கள் படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்றது அல்ல என்றும் நினைக்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் கூட அந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சும்மா இருக்கும் நிலையையும் காண முடிகிறது.

இதை நன்கு அறிந்துகொண்டுள்ள தொழில் முனைவோர், பெரும் தொழிலதிபர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் வடமாநில இளைஞர்களை தங்களது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். இப்படி தமிழகம் வரும் பல லட்சக் கணக்கான வட மாநில இளைஞர்களில் ஒரு சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கும் இல்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது.

அதேநேரம் வட மாநில இளைஞர்கள் வேலை தேடி வரும் பிரச்சனைக்கு ஒரு விதத்தில் தெரிந்தோ, தெரியாமலோ சீமான், வேல்முருகன், திருமாவளவன், வைகோ போன்ற தலைவர்கள் மூல காரணமாக உள்ளனர். இவர்கள் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் விதமாக ஆக்கபூர்வமான யோசனைகளை கூறுவதை விடுத்து வீர ஆவேசம் பேசி கொதி நிலைக்கு அவர்களை கொண்டு சென்று விடுகின்றனர்.

பிரிவினைவாத எண்ணத்தையும் அவர்களின் சிந்தனையில் பதிக்கின்றனர். இந்த உண்மையை தமிழக இளைஞர்கள் உணரும்போது வேலை தேடி தமிழகத்துக்கு வரும் வட மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக குறையும். இல்லையென்றால் அவர்களின் வருகை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.

தமிழகத்தில் தற்போது கட்டாயமாக இந்தி பாடத்தை கற்றுத் தரும் சுமார் 1800 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. இதன் மூலம் 20 லட்சம் மாணவர்கள் இன்று இந்தி கற்று வருகிறார்கள். எனவே இந்தப் பள்ளிகளுக்கு முன்பாக சீமான் வைகோ, திருமா போன்ற தலைவர்கள் தங்களது இந்தி திணிப்பு போராட்டத்தை முதலில் முன்னெடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 426

1

0