TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை நேரடியாக பணி நியமனம் செய்க : போட்டித் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
1 March 2022, 7:20 pm
Quick Share

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய நிலை இருப்பதால் ஆசிரியர் பணித் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அல்லலுற்று வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்யாமல் காலம் கடத்தும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் அரசு ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது.

ஆசிரியர் தேர்வு முறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அவ்வரசாணையை வன்மையாகக் கண்டித்ததோடு, அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு நாம் தமிழர் கட்சி அப்போதே வலியுறுத்தியது. ஆனால் முந்தைய அதிமுக அரசு அதனைச் சிறிதும் கண்டு கொள்ளாமல், ஆசிரியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய தீங்கிழைத்தது.

ஒரு பணிக்காக இருமுறை தேர்வு எழுத வேண்டிய சிக்கலான நிலையை எதிர்த்து, ஆசிரியர் பணித் தேர்வர்கள் தொடர்ப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டாகியும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அதிமுக அரசின் அதே வஞ்சகப்போக்கினை திமுக அரசும் கடைபிடித்து வருவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

ஆகவே, ஒரு பணிக்கு இருதேர்வுகள் எனும் மிகத்தவறான தேர்வு முறையை திமுக அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அரசாணையை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், தங்களின் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவளித்து, போராட்டக்கோரிக்கைகள் நிறைவேற இறுதிவரை உறுதியாகத் தோள்கொடுத்துத் துணைநிற்குமென உறுதியளிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 952

0

0