‘நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி’… பரபரப்பு வாதத்தை முன்வைத்தது அமலாக்கத்துறை.. உச்சநீதிமன்றத்தில் முடிவு என்ன..?

Author: Babu Lakshmanan
20 June 2023, 11:33 am
Quick Share

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவு போல நாடகமாடுவதாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது.அப்போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்தநிலையில் மருத்துவமனைக்கே வந்த நீதிபதி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வசதியாக காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 8 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. அப்போது, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அதன்படி காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து செல்லக்கூடாது. மருத்துவர்களின் அனுமதியோடு விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த தீவிரம் காட்டியது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஓய்வு எடுத்து வருவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருவதால் விசாரணை நடத்த முடியாமல் அமலாக்கத்துறை தவித்து வருகிறது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு எதிராகவும் அமலக்காத்துறை உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே இரு மனுக்களை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகுதான் அவர் உடல்நிலை பாதிக்கப்ப்டடதாக புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமலாக்கத்துறையின் பயனுள்ள விசாரணையை அர்த்தம் இல்லாதது போல மாற்றுவதைப் போல அவர் உடல்நலக்குறைவு போல் நடிக்கிறார் என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணையுடனும், நீதிமன்ற நடைமுறையுடனும் விளையாட குற்றம்சாட்டப்பட்டவர்களை அனுமதிக்க முடியாது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 352

0

0