ரூ.1 லட்சம் கோடி ஊழல்..? செந்தில் பாலாஜிக்கு எதிராக களமிறங்கும் கிருஷ்ணசாமி… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புது சிக்கல்!!

Author: Babu Lakshmanan
20 June 2023, 10:47 am
Quick Share

நெல்லை ; மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர்வேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம். மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற விழிப்புணர்வு புத்தகத்தினை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை சந்திப்பு இரயில்வே நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கிருஷ்ணசாமி கூறியதாவது:- தமிழகத்தில் கொள்கை முடிவு என்ற பெயரில் கடந்த 20 வருடத்திற்கு மேலாக ஆட்சியாளர்களால் மதுவிலக்கு தளர்த்தப்படவில்லை. தமிழக அரசு நாளுக்கு நாள் மது பாட்டில்களின் விற்பனையை அதிகரித்து வருகிறது. இதனால், குடிப்பழக்கம் இல்லாதவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

தமிழகத்தில் 19 மதுபான ஆலைகள் செயல்படுகிறது. மது பாட்டில்களுக்கு வரிகள் செலுத்தாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் பார்களில் லட்சக்கணக்கான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மது பாட்டில் விற்பனைகளில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்தி அவருக்கு துணை போன முதல்வர் மு.க. ஸ்டாலினிடமும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.

டாஸ்மாக் மதுபானம் விற்பனையில் ரூ.1 லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளேன். இந்த வாரத்திற்குள் நிச்சயம் அனுமதி கிடைக்கும். கிடைத்த உடனே வழக்கு தொடர உள்ளேன்.

டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூட வேண்டும். 19 மதுபான ஆலைகளையும் மூட வேண்டும். மதுபான விற்பனையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பார்கள் மூலம் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக டாஸ்மாக் விளங்குவதால் அதனை உடனே அரசு மூட வேண்டும். மதுபானங்களை மூடி கள்ளு கடைகள் திறக்க வேண்டும் என்பது தவறு. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும். அல்லது பொது மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தார்.

Views: - 361

0

0