10-ல் ஏழு தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கா?… கொதிக்கும் தென் மாவட்ட திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 9:24 pm
DMK
Quick Share

10-ல் ஏழு தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கா?… கொதிக்கும் தென் மாவட்ட திமுக!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 39 தொகுதிகளுக்கும் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு பங்கீடு முடிந்து விட்டது என்று கூறப்பட்டாலும் கூட ஆங்காங்கே காங்கிரஸ், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, ஆகியவற்றில் குழப்பம் ஏற்பட்டதை காண முடிந்தது.

திருச்சியை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைகீழாக நின்று பார்த்தது. திருநாவுக்கரசர் எம்பிக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எவ்வளவோ முட்டி மோதிப் பார்த்தார். ஆனாலும் திமுக கடைசி வரை இறங்கி வரவே இல்லை. திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கி விட்டது.

இதேபோல ஆணவக் கொலையை ஆதரித்து பேசியதற்காக நாமக்கல் தொகுதியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூர்ய மூர்த்தி பற்றி திமுக தலைமைக்கு கண்டன கணைகள் பாய்ந்தன. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி திமுகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் அதிர்ச்சியடைந்த நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் சூர்ய மூர்த்தியை மாற்றியே ஆக வேண்டும், இல்லையென்றால் திமுக சின்னத்தில் நாமக்கல்லில்
போட்டியிடும் அவர் தோல்வி அடைவது நிச்சயம். அது நமது கட்சிக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

இதனால் வேறு வழியின்றி திமுக தலைவர் ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏவிடம் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அந்த தொகுதியின் வேட்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டார். சூர்ய மூர்த்திக்கு பதிலாக அக் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுக்கு அறிவாலயம் தங்கள் பகுதியில் தொகுதிகளை சரியான விகிதாச்சாரத்தில் பகிர்ந்து அளிக்கவில்லை என்று கோபம் பொங்க கொந்தளிக்க தொடங்கி உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் தென் மாவட்டங்களில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளிலும் திமுகவை காட்டிலும் கூட்டணி கட்சிகளுக்கே அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதுதான்.

மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், ராமநாதபுரம் முஸ்லிம் லீக்கிற்கும், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு தொகுதிகள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் திமுகவோ தேனி, தூத்துக்குடி, தென்காசி என மூன்று தொகுதிகளில்தான் களம் காண்கிறது.

இதுதான் தென் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

“குறிப்பாக நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கி இருக்கவே கூடாது. தற்போதைய எம்பி ஞானதிரவியம் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் கூட ஆளும் திமுக அரசின் மீது வாக்காளர்களுக்கு எந்த கோபமும் கிடையாது. அதனால் கட்சித் தலைமை வேறொருவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம்.

அதேபோல திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்ததையும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. கோவை தொகுதியை திமுக எடுத்துக் கொண்டிருப்பது நல்ல விஷயம்தான். அதற்காக திண்டுக்கல்லை ஒதுக்கி இருக்க வேண்டியதில்லை. மயிலாடுதுறை அல்லது கடலூர் தொகுதியை அக்கட்சிக்கு கொடுத்திருக்கலாம். இப்படி செய்திருந்தால் தென் மாவட்டங்களில் உள்ள பத்து தொகுதிகளில் சரி பாதி அளவிற்கு திமுக போட்டியிடும் நிலை உருவாகி இருக்கும்.

ஆனால் இப்போது செல்வாக்கு மிகுந்த தென் மாவட்டங்களில் திமுக மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

அதேநேரம் வட மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும், டெல்டா பகுதிகளிலும் திமுக 18 இடங்களில் போட்டியிடுகிறது. இது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் கூட ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளிலாவது திமுக போட்டியிட்டு இருக்கவேண்டும். அப்போதுதான் கட்சியை மாநிலம் முழுவதும் ஒரே சீராக வளர்ச்சியடைச் செய்ய முடியும். இல்லையென்றால் கட்சியை பலப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்” என்று தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் மனம் குமுறுகின்றனர்.

“இவர்கள் இப்படி திமுக தலைமை மீது ஆதங்கப்படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கவே செய்கிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“இதற்கான முக்கிய காரணம் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பலத்த மும்முனைப்போட்டி உருவாகி இருப்பதுதான்.

சீமானின் நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் கூட அக்கட்சியால் வெற்றி பெறுவது மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கும். வேண்டுமென்றால் ஒரு சில தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே மும்முனைப் போட்டி என்று கூறுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

இந்த நிலையில்தான் திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வலுவான வேட்பாளர்களை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட்டுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த தென் மாவட்ட தொகுதிகள் அனைத்திலுமே கூட்டணி கட்சிகளுக்காக திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் முழு வீச்சில் தேர்தல் வேலைகளை கவனிக்க வேண்டிய கூடுதல் சுமையும் சேர்ந்துள்ளது.

இக் கட்சிகள் கொஞ்சம் அசந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு அதிமுக பக்கமோ, பாஜக கூட்டணி பக்கமோ சென்றுவிடலாம்.

ஏற்கனவே ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் இப்படி கூறுவதன் மூலம் பல தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஓட்டு குறையலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம் அந்த வாக்குகள் குறைவு தோல்வியை தந்து விடும் அபாயமும் உண்டு.

அதனால்தான் திமுக நிர்வாகிகள் இப்படி மனம் குமுறுகிறார்கள் என்றே கருதத் தோன்றுகிறது.
அதேநேரம் தென் மாவட்டங்களில் மட்டும்தான் இப்படி என்றில்லை. கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கரூர், சேலம் என 7 தொகுதிகளிலும் வட மாவட்டங்களில் விழுப்புரம், ஆரணி, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், கடலூர், வேலூர் என்று 6 எம்பி சீட்களிலும் டெல்டா மாவட்டங்களில் திருச்சி, மயிலாடுதுறை ஆகியவற்றிலும் திமுக கூட்டணிக்கு இது போன்ற சவால்கள் காத்திருக்கின்றன” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

இதன்படி பார்த்தால் திமுக கூட்டணி 20 இடங்களை மட்டுமே கைப்பற்றும் சூழல் இருப்பதையும் எஞ்சிய 19 தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. சபாஷ், சரியான போட்டி திமுகவுக்கு காத்திருக்கிறது!

Views: - 176

0

0