இம்போர்ட் செய்யப்படும் அழகிகள்…கண்டு கொள்ளாமல் இருக்கும் காவல்துறை: தஞ்சையை அதிரவைக்கும் பாலியல் நெட்வொர்க்..!!

Author: Aarthi Sivakumar
3 November 2021, 3:18 pm
Quick Share

தஞ்சை: தங்கும் விடுதிகள், அழகு நிலையம், குடியிருப்பு பகுதிகள் வரை கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வடமாநில இளம்பெண் ஒருவர் காயங்களுடன் சாலையில் மயங்கி கிடந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ‘வீட்டு வேலை என்று சொல்லி அழைத்துவந்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது’ தெரியவந்தது. இதன் பின்னணியில் இருந்த செந்தில்குமார் – ராஜம் தம்பதியரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சில மாதங்களிலேயே இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இந்நிலையில் தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் தொழில் எல்லை மீறி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் ஏராளமான பாலியல் சம்பவங்கள் தஞ்சையில் அரங்கேறியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தங்கும் விடுதியில் லென்ட் பிராங்கிளின் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களே அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் செந்தில்குமார் – ராஜம் தம்பதியை கைகாட்டியுள்ளனர்.

இதற்காக 14 புரோக்கர்களை அந்த தம்பதியினர் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் சேல்ஸ் கேர்ள் போல அல்லது உறவினர்களைப் போல பெண்களை அனுப்பிவைப்பதாக கூறப்படுகிறது. இவர்களின், இந்த தொழிலுக்கு போலீஸ் ஒருவரும் உதவி செய்தது தெரியவந்துள்ளது.

வி.ஐ.பிகளுக்கு கேரளா, ஆந்திரா, டெல்லி, புனே உள்ளிட்ட இடங்களிலிருந்தும் தொழிலுக்காக விமானத்தில் வரவழைக்கப்படும் பெண்களை இந்த போலீஸ்தான் அழைத்துச் செல்வார் என கூறப்படுகிறது. வியாபாரத்தை விருத்தி செய்வது போல ஏராளமான கிளைகளை இந்த தம்பதி தொடங்கியுள்ளது. மசாஜ் சென்டர், சிலம்பம் வகுப்பு போன்ற பேர்களில் பாலியல் தொழில் அரங்கேறி வருவதால் இளம்பெண்கள் மற்றும் பெண்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறைக்கும் மாமூல், மற்ற வசதிகள் என அனைத்தையும் இவர்கள் கவனித்துக்கொள்வதால், அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமத்திலும் பாலியல் தொழில் பரவிவிட்டது. கும்பகோணத்தில் சுவாமிமலை, மேலக்காவிரி, செட்டி மண்டபம், அஞ்சுகம் நகர் பகுதிகளில் பட்டப்பகலில் பாலியல் தொழில் களைகட்டி வருகிறது.

ஆன்மிகத் தலமான கும்பகோணத்தில் பக்தர்கள் போர்வையில் பாலியல் ஆசாமிகள் ஹாயாக தொழிலை கவனிக்கின்றனர். புகார் அளிக்கப்பட்டாலும் போலீசாரின் விசாரணை வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமாரிடம் இது பற்றியெல்லாம் கேட்டோம். “புகாரின்பேரில் ஆங்காங்கே நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். ஜாமீனில் வெளியே வந்து இந்தத் தொழிலை செய்பவர்களைக் கண்காணித்துவருகிறோம். கடும் நடவடிக்கைகள் மூலம் பாலியல் தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என்றார்.

விவசாயத்திற்கு, கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற தஞ்சாவூர் பாலியல் தொழில் அற்ற நகரமாக மாற வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Views: - 490

1

0