இசை பிரியர்களிடம் இருந்து பிரியா விடை பெற்றார் எஸ்.பி. பாலசுப்ரமணியம் : 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்..!

26 September 2020, 12:48 pm
spb final 2- updatenews360
Quick Share

திருவள்ளூர் : உடல்நலக்குறைவால் காலமான பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில், நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிர் பிரிந்தது.

SPB Dead - updatenews360

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று நள்ளிரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாயப் பண்ணைக்கு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டது.

spb funeral - updatenews360

இன்று காலை முதல் அவரது உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், மகன் எஸ்.பி.பி. சரண் மற்றும் குடும்பத்தினர் இறுதிச் செய்தனர். இதைத் தொடர்ந்து, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள அடக்கம் செய்யப்படும் இடம் வரையில் அவரது உடலின் இறுதி யாத்திரை நடைபெற்றது.

பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின்படி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இன்பம், துன்பம் உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளிலும், ஒவ்வொரு மனிதனின் கூடவும் தனது குரலால் உடனிருந்த எஸ்.பி. மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பது நிதர்சனமானதாகும்.