ஹாரன் இருக்கு, ஆனா அடிக்காது… மீட்டர் இருக்கு ஆன ஓடாது : அரசுப் பேருந்தின் அவலம்… அம்பலப்படுத்திய ஓட்டுநர்!!

Author: Babu Lakshmanan
16 November 2021, 12:11 pm
Government bus - updatenews360
Quick Share

சிவகங்கை : மோசமான நிலையில் இருக்கும் அரசுப் பேருந்தை இயக்கச் சொல்வதாக, போக்குவரத்து ஊழியர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவகோட்டையில் இருந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அரசு நகரப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததால், ஓட்டுநர்களும், நடத்துநர்களுமே பெரும் அச்சத்துடன் அதனை இயக்கி வருகின்றனர்.

ஆனால், எதற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை உணர்ந்த தேவகோட்டையில் பேருந்தை ஓட்டி வரும் ஓட்டுநர் ஒருவர், தனக்கு ஓட்டுவதற்கு வழங்கப்பட்ட அரசுப் பேருந்தின் அவல நிலையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :- ரெண்டு ஹாரன் இருக்கு. ஆனா அடிக்காது. டேஷ் போர்டுல எந்த மீட்டரும் வேலை செய்யல. ஏர் மீட்டரு கூட வேலை செய்யாது. முன்னாடி சக்கரம் பார்த்தீங்கனா.. டயர் அதிகம் தேய்ந்து, கம்பி வெளியே தெரியுது. ஆபத்தான நிலையில அரசுப் பேருந்து ஓடிக்கிட்டு இருக்கு. காரைக்குடி மண்டலம் தேவக்கோட்டை கிளையைச் சேர்ந்த இந்தப் பேருந்து எண் : TN63 N1472. ஏதாவது விபத்து நடந்தால், ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியதால்தான் நிகழ்ந்தது எனச் சொல்வதற்கு தயாராக இருக்கின்றனர். ஆனால், போக்குவரத்து மேலாளரின் அலட்சியத்தினால்தான் விபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்தப் பேருந்து.

பேருந்தை சீர் செய்து தருமாறு போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள மெக்கானிக்கும் வேலை செய்து தர மறுப்பதாகவும் அந்த வீடியோவில் ஓட்டுநர் குற்றச்சாட்டியுள்ளார்.

அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இதுபோன்ற பேருந்துகளை இயக்கினால், சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்று மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை இயக்கி விபத்து ஏற்பட்டால், ஒருவேளை உயிர்பலி ஏற்படும் பட்சத்தில், வெறும் நிவாரணத்தை மட்டும் கொடுத்து சரிகட்டி விடலாம் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளின் மனதில் ஓடிக் கொண்டிருப்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது.

எனவே, உடனடியாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு, அரசுப் பேருந்துகளின் கண்டிஷனை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 260

0

0