நடுநிலை வேடம் கலைந்த சிவசேனாதிபதி : ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி!!

21 September 2020, 8:12 pm
siva senapathi 1- updatenews360
Quick Share

சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக தலைவர் மு.க. உதயநிதி ஸ்டாலினை சந்தித்த புகைப்படத்தை திடீரென்று வெளியிட்டது அப்போராட்டத்தை முன்வைத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவும், சிவசேனாதிபதியும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்குக் காரணம் அது எந்தக் கட்சியையும் சாராத போராட்டமாகக் கட்டி அமைக்கப்பட்டதுதான். பெருமளவு கட்சி சாராத மாணவர்களும், இளைஞர்களும் மாநில முழுவதும் பல இடங்களில் உணர்ச்சிப்பெருக்குடன் கலந்துகொண்டு மிகப்பெரிய மக்கள் போராட்டமாக அது நடைபெற்றது. போராட்டத்தின் நடுவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மெரினாக் கடற்கரைக்கு வந்தார். ஆனால், ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள், அவரை உள்ளே விடாமல் விரட்டி அடித்தனர்.

jallikattu protest 210920

ஆனால், போராட்டத்தைத் தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்த சிவசேனாதிபதி போன்றவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அப்போது தங்களை நடுநிலையாளர்களாகவும் கட்சி சேராதவர்களாகவும் காட்டிக்கொண்டனர். ஆனால், அவர்களது வேடம் தற்போது கலைந்துள்ளது. திமுக தலைவரை சந்தித்ததுடன் நில்லாமல், தான் பரம்பரையாகத் திமுகவைச் சேர்ந்தவர் என்று அவரே ஒப்புக்கொண்டது, அந்தப்போராட்டமே ஏதோ ஆதாயத்துக்காக திமுகவால் தூண்டிவிடப்பட்டு, பின்பு அவர்களின் கைகளை விட்டு நழுவிச்சென்றதோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இறுதியில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்றி ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ, பன்னீர்செல்வம் தட்டிச்சென்றார். திமுக நினைத்ததுபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வைத்து அக்கட்சியால் அரசியல் ஆதாயம் தேட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது, தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடங்குவதில் பங்கு வகித்த தங்கள் கட்சியினரை வெளிப்படையாக அடையாளம் காட்டி அரசியல் ஆதாயம் தேட திமுக திட்டம் தீட்டி வருகிறது.

திமுகவின் திட்டத்துக்கு ஏற்ப நடுநிலை வேடத்த்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு கொண்ட சிவசேனாதிபதி திமுக தலைவர்களை சந்தித்து தனது வேடத்தைக் கலைத்துள்ளார். கொங்குப்பகுதியில் திமுக வலிமை குறைந்த நிலையில் இருப்பதால், அதை ஈடுகட்ட சிவசேனாதிபதிக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுத்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வைத்து அரசியல் அறுவடைக்கு அக்கட்சி தயாராகி வருகிறது.

சிவசேனாதிபதி தனது கட்சி சாராத வேடத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து தானும் தனது குடும்பமும் திமுக என்று அப்போதே கூறாதது ஏன் என்று சமூக ஊடகங்களில் அவரைப் பலரும் கலாய்த்து வருவதுடன், பலத்த கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 13

0

0