சிறு,குறு தொழில் நிறுவனங்களில் மின்சார உச்சவரம்பு 150 கிலோவாட் ஆக அதிகரிப்பு : தமிழக அரசு

14 September 2020, 2:27 pm
eb - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் சிறு,குறு தொழில் நிறுவனங்களில் மின்சார உச்சவரம்பு 150 கிலோவாட் ஆக அதிகரித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் சிறு குறு தொழில்களின் துயர் தீர்க்கும் வகையிலும், தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் புரிவோர்க்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகளை களையும் வகையிலும், தாழ்வழுத்த மின்னிணைப்பு பெறுவதற்கு தற்போது உள்ள மின்தேவை மேல்வரை 112 கிலோ வாட்டிலிருந்து 150 கிலோ வாட்டாக உயர்த்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை மின்சார வழங்கல் விதித்தொகுப்பு மின்சார பகிரமான விதித் தொகுப்பிலும் திருத்தம் அறிவித்துள்ளது

அதன் முக்கிய அம்சங்கள் :-

  • இனிமேல், தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிடே வாட் மின்தேவை வரையில் பெற்றுக் கொள்ளலாம்.
  • 112 கிலோ வாட் மற்றும் அதற்கு குறைவான மின்தேவையுடன் தற்போதுள்ள நுகர்வோர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தாழ்வழுத்த மின் கட்டணங்களும் விதிகளும் தொடரும்

. • 112 கிலோ வாட்டிற்கு மேல் மின் தேவை உள்ள நுகர்வோர்கள், தாழ்வழுத்த மின் இணைப்பை, 150 கிலோ வாட் வரை பின் வரும் நிபந்தனைகளுடன் பெற்றுக் கொள்ளலாம்

  • தங்கள் வளாகத்திற்குள் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தைத் தர வேண்டும்
  • உயரழுத்த மின்னிணைப்பிற்குண்டான மின்தேவை மற்றும் மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • மின்மாற்றி அமைப்பதற்குண்டான பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை மின்வழங்கும் நிறுவனம் ஏற்கும்.
  • நுகர்வோர் வளாகத்திற்குள் அமைக்கப்படும் பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை மின்கடத்திகளுக்குண்டான விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும்.
  • முடிந்த இடத்திலெல்லாம் ஒற்றைக் கம்பு வகை மின்மாற்றி அமைப்பை நிறுவி இடத்தையும் செலவையும் குறைக்கலாம்.
  • அனுமதிக்கப்பட்ட உச்ச மின்தேவையை மீறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகை கொள்கையளவில் 12 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கும் 112 கிலோ வாட்டிற்கு மேல் 150 கிலோ வாட் உள்ள நுகர்வோர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்
  • 150 கிலோ வாட் உச்ச மின்தேவையை மூன்று முறையோ அதற்க்கும் மேலோ மீறும் பட்சத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு உயரழுத்த மின்னிணைப்பாக மாற்ற நுகர்வோருக்கு அறிவிப்பு வழங்கப்படும்
  • இந்தத் திருத்தம் வருவதற்கு முன், உயரழுத்த மின்னிணைப்பைப் பெற வசதியில்லாமல் 112 கிலோ வாட் மின்தேவையை பெரும் தொகையை அபராதமாக கட்டி வந்த நுகர்வோர்கள், இனிமேல் 150 கிலோ வாட் வரை மின்தேவையை கூடுதலாகப் பெற்று அபராதத்தைத் தவிர்க்கலாம்
  • மின்மாற்றியை மின்தேவை உள்ள நுகர்வோர் இடத்திலேயே அமைப்பதினால் மின்னிழப்பு பெருமளவு குறையும், மின் அழுத்தம் மின்தடைகள் பெருமளவில் குறையும்.சீராகும், மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை வலுப்படும்.
  • தாழ்வழுத்த மின்கடத்திகளின் நீளம் குறைந்தால் தாழ்வழுத்த விகிதம் மேம்படுவதுடன் நுகர்வோர்களுக்கு ஏற்படும் மின்தடைகள் பெருமளவு குறையும்.

தமிழ்நாடு அரசு நாளிதழில் 01.07.2020 அன்று வெளியிடப்பட்ட மேற்கண்ட திருத்தத்தின் கூடுதல் விபரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.tnerc.gov.in) காணலாம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0