சமூக நீதி கண்காணிப்பு குழு அமைப்பில் பாகுபாடு… கடும் விமர்சனங்களால் புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 11:24 am
Cm stalin - Social Justice monitor team - updatenews360
Quick Share

சென்னை சமூக நீதி கண்காணிப்பு குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லாததுதான் சமூக நீதியா..? என்று கடும் விமர்சனம் எழுந்த நிலையில், குழுவில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை முறையாகக் கடைபிடிப்பதைக் கண்காணிக்க ‘சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு’வை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழுவானது, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள்‌, பதவி உயர்வுகள்‌, நியமனங்கள்‌ ஆகியவற்றில்‌ சமூகநீதி அளவுகோல்‌, முறையாக முழுமையாகப்‌ பின்பற்றப்படுகின்றனவா என்பதைக்‌ கண்காணிக்கும்‌, வழிகாட்டும்‌, செயல்படுத்தும்‌ பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால்‌, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப்‌ பரிந்துரை செய்யும்‌.

இந்தக் குழுவில், பேராசிரியர்‌ திரு. சுப. வீரபாண்டியன்‌ – தலைவர்‌
முனைவர்‌ கே. தனவேல்‌, இ.ஆ.ப., (ஓய்வு) – உறுப்பினர்‌
பேராசிரியர்‌ முனைவர்‌ சுவாமிநாதன்‌ தேவதாஸ்‌ – உறுப்பினர்‌
கவிஞர்‌ திரு. மனுஷ்யபுத்திரன்‌ – உறுப்பினர்‌
திரு. ஏ.ஜெய்சன்‌ – உறுப்பினர்‌
பேராசிரியர்‌ முனைவர்‌ ஆர்‌. இராஜேந்திரன்‌ – உறுப்பினர்‌
திரு. கோ. கருணாநிதி – உறுப்பினர்‌, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களே இல்லாத சமூக நீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நீதி என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, பெண்களே இல்லாமல் ஒரு குழுவை அமைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்ற விமர்சனம் செய்து வந்தனர். அனைத்து துறையில் சமூக நீதி இருக்க வேண்டும் என எண்ணும் அரசு, சமூக நீதி கண்காணிப்பு குழுவில் ஒரு பெண்ணை கூட நியமிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அனைவரும் சமம், அனைவருக்கும் உரிமை என்ற வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் குழு அமைப்பதிலேயே பாகுபாடா என்ற விமர்சனத்தையும் நெட்டிசன்கள் முன் வைத்தனர்.

இந்த நிலையில், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் அவர்களை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழுவில்‌, மாணவர்‌ சமுதாயத்திற்கான சமூக நீதி, மகளிர்‌ உரிமை மற்றும்‌ பெண்களுக்குச்‌ சமூகப்‌ பங்களிப்பில்‌ அதிகாரமளித்தல்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்‌ மிகுந்த ஆர்வமும்‌, ஈடுபாடும்‌ கொண்டுள்ள மருத்துவர்‌ சாந்தி ரவீந்திரநாத்‌ அவர்களை சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு உறுப்பினராக நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இதுபோன்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மாறாக, அரசு நடவடிக்கை எடுக்கும் போது, நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 266

0

0