சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு சிக்கல் : சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

16 September 2020, 11:00 am
Quick Share

சென்னை : நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் மீது சட்டநடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் மண் உருண்ட மேல என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல்,”கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகளை உள்ளடக்கியுள்ளது.

பல சமுதாய மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் வரிகள், சாதி வெறியைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும், எனவே இந்தப் படத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்க வேண்டும் என தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். ஆனால், அவரது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்கு தொடர்ந்தார். அப்போது, இது தொடர்பாக எந்தவித புகாரும் வந்து சேரவில்லை என்று காவல்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து, சூர்யாவின் சூரரைப் போற்று வரும் அக்.,30ம் தேதி OTT-யில் வெளியாக இருந்தது. தற்போது, அந்தப் படத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திட்டமிட்டப்படி அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

Views: - 0

0

0