பாடும் நிலாவுக்குப் பாச அஞ்சலி!! (கவிதை வடிவில்..)

26 September 2020, 11:05 am
Quick Share

ஆயிரம் நிலவாய் அறிமுகமான நீ
அமாவாசையாய் ஆகி விட்டாயே !

அனைத்து விதமாகவும் பாடும்
ஆனந்த நிலவே! இப்போதோ –
அணைந்த விளக்காய் நீ –
நனைந்த விழியோடு நாங்கள்!

“பொட்டு வைத்த முகமோ” பாடி – எம்மைப்
புல்லரிக்க வைத்தவனே! நீ
விட்டுப் போன இடத்தை யாரால்
இட்டு நிரப்ப இயலும்?

உழைத்துக் களைத்த எம்மை
உன் குரலால் விசிறி விட்டாய் –
அதனால்தான் நாங்கள்
உன் விசிறிகளாய்
உரு மாறினோம்.

“மண்ணில் இந்தக் காதல்” பாடலை
மூச்சு விடாமல் பாடிய நீ – இன்று
மூச்சை விட்டு விட்டாயே!

“ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்
உலகம் புரிஞ்சுகிட்டேன்” என்று
உருகிப் பாடிய நீ
மேலுலகைத் தெரிந்து கொள்ள
மேனியினை உதிர்த்தாயோ?

நாரத கானம்
நமர்த்துப் போனதென்று –
நாதம் அங்கு இசைக்க
நமசிவாயனார் உனை அழைத்தாரோ?

SPB OK - updatenews360

“பௌர்ணமி நிலவும்
பனி விழும் இரவும்”
இனியும் வரும் – ஆனால் உன்
இனிப்பிருக்காது.

சங்கராபரணமாய்
சாரல் பொழிந்த நீ –
சாவு ஆபரணத்தைச்
சூடிக் கொண்டாயே!

ராகமழை பொழிந்த
ராஜ பாடகனே – எமை
சோக மழையில் விட்டு
சொர்க்கம் போனாயோ?

பல்லவி, சரணம் என்று
பாடலாய் தழுவினாயே –
பாதியில் மரணம் வந்து
பாதையை மாற்றினாயே!

கனவுக் குரலோனே –
கனிவுக் குயிலோனே!
பண்ணிசையாய் வாய்த்து – எம்மைப்
பன்னீரில் தோய்த்துப்
பரவசப் படுத்திய நீ – இன்று
கண்ணீரில் ஆழ்த்திக்
கலங்க வைத்தாயே!

உன் உடலை தீ சுடுமோ?
உறுத்துமே அதற்கு! அந்தத்
தீ நாக்கு ஒவ்வொன்றும் உன்
தெம்மாங்கு பாடிடுமே!

சரஸ்வதி தேவியின்
சந்நிதானத்தில் ஒளிரும்
சத்திய தீபமே!

உன் ஒவ்வொரு கீதத்திலும் – எங்கள்
உயிரே ஒட்டிக் கொண்டதே!
அந்த ஒட்டுதல்
இசையமைப்பால் நிகழவில்லை –
உன் குரலின்
பசையமைப்பால் நிகழ்ந்தது.

எம்ஜிஆர் சிவாஜி தொடங்கி
இன்றுள்ள நடிகர் வரை – உன்
இன்குரலின் மின்னழகை
ஏந்தி நடித்தவரே!

கட்டைக் குரல், கம்மும் குரல் ,
லட்டுக் குரல் , பட்டுக் குரல் …. இன்னும்
கஷ்டக் குரல் கானங்கள் பலவற்றை – உன்
இஷ்டக் குரலாலே எடுத்துப் பாடினாயே! உன்
புஷ்டிக் குரலாலே பூரித்திருந்தோமே – காலன்
துஷ்டக் குரல் கொடுத்து உன்னைத்
தூக்கிச் சென்றானே!

எங்கே இனி காண்போம்
இத்தகைய ரத்தினத்தை?

எங்கே இனி பார்ப்போம்
இசை வடிவாம் முத்தினத்தை?

இனிமேல் மறப்போமா – உனை
எமன் கொண்ட இத்தினத்தை?

என்றென்றும் நினைவில் கொள்வோம் – எம்
இதயம் கவர் இசை வரத்தை!

Views: - 6

0

0