13 லட்சம் பறிமுதல்.. வங்கிக் கணக்கு முடக்கம் என வெளியான தகவல் வதந்தி.. சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயார் : எஸ்பி வேலுமணி அதிரடி!!

Author: Babu Lakshmanan
14 August 2021, 4:07 pm
sp velumani - updatenews360
Quick Share

எனது வீட்டிலோ அல்லது எனது உறவினர் வீடுகளிலோ லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள எம்எல்ஏ.,க்கள் விடுதியில் இருந்த எஸ்.பி.வேலுமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் பெரும்பாலான இடங்களில் எவ்வித ஆவணங்களும் கிடைக்கவில்லை.

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அதிமுக நிர்வாகிகளை பழிவாங்க நினைப்பதாக பரவலான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த சூழலில், எஸ்.பி.வேலுமணி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை வரவேற்க 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் விமான நிலைய வளாகத்தில் குவிந்தனர்.

மேலும் மேளதாளங்கள் முழங்க, “கொங்கு நாட்டு சிங்கமே” என்ற கோஷங்களை எழுப்பி மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து சித்ரா வரை வழி நெடுகிலும் நின்றிருந்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் எஸ்.பி.வேலுமணி.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சம்பந்தமில்லாத பகுதிகளில் போலீசாரை ஏவி சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளை எங்களுக்கு வெற்றி தேடித் தந்தார்கள். 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை அடைய கொண்டு திட்டங்களினால் மக்கள் இந்த முடிவை கொடுத்துள்ளார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட இந்த சோதனையை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். 13 லட்சம் கைப்பற்றப்பட்டது கூட என் வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ அல்ல. எனது வங்கிக் கணக்கு முடக்கம் என்பது கூட தவறான தகவல்.

அனைத்து மதத்தையும் மதிப்பவன் நான். நீதியரசர்களை நம்புகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட இந்த வழக்கை சந்திப்போம். உள்ளாட்சி துறைகளில் யாரும் செய்ய முடியாத சாதனைகளை செய்தேன். 148 விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். கிராமச் சாலைகள் அதிகமாக போடப்பட்டது. அதிகமான வீடுகளுக்கு ஏழைகளுக்கு கட்டிக் கொடுத்துள்ளோம். கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்

ஆட்சியில் இருக்கும் போதும் சரி, தற்போதும் சரி ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நாங்கள் செய்த சாதனைகளினால் கோவை மாவட்ட மக்கள் வெற்றியை தேடித்தந்தனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட நான் முக்கியக் காரணமாக இருந்தேன். அதனால், தான் திமுக என் மீது இந்த ரெய்டு நடவடிக்கையை ஏவி விட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 341

0

0