சோதனையின் போது நியாயத்தின் பக்கம் நின்றீர்கள்… நம்பிக்கை கொடுத்த அனைவருக்கும் எஸ்பி வேலுமணி நன்றி

Author: Babu Lakshmanan
11 August 2021, 11:12 am
Sp velumani thanks - updatenews360
Quick Share

சென்னை : லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய போது, தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 35 இடங்களிலும், தமிழகம் முழுவதிலும் சேர்த்து மொத்தம் 52 இடங்களிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 12 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், லாக்கர் சாவியை மட்டுமே எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சான்றழித்து விட்டுச் சென்றுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்த தொடங்கிய போது எஸ்பி வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், சோதனை முடியும் வரையில் அங்கே தங்கிவிட்டனர். இதனால், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டும் இருந்தனர்.

அதேவேளையில், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ எஸ்பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையும் நிறைவடைந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய போது, தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 586

0

0