எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு சென்று வந்த கமல்ஹாசன் தகவல்!!

24 September 2020, 10:44 pm
Quick Share

சென்னை: தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று சிகிச்சைகள் கேட்டறிந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக அவரின் மகன் பாடகர் சிபிசரண் கடந்த சில தினங்களுக்கு முன் உறுதிப்படுத்தியிருந்தார்.

கடந்த சில நாள்களாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், “உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். நலமாக உள்ளார் என சொல்ல முடியாது. கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.” என கூறினார்.