மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த ராஜபக்சே அரசு : இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு களமிறங்குமா?

28 September 2020, 8:30 pm
Modi - rajabhakse - updatenews360
Quick Share

சென்னை : இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கும் வகையில் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டிருந்ததை முற்றிலும் நீக்கி, இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிக்கை வெளியிட்டிருப்பது, அத்தீவின் தமிழர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் தருவதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ராஜபக்சேவுடன் பேசிய இந்தியப் பிரதமர் இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி வழங்கும் விதத்தில், இந்திய-இலங்கை அரசுகள் 1987-ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இலங்கையின் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இது இடம்பெற்றிருந்தது. ஆனால், சில மணி நேரங்களிலேயே இலங்கைப் பிரதமர் ராஜபக்சே 13-வது சட்டத்திருத்தம் பற்றிய பேச்சுகளை நீக்கிவிட்டு, தனியொரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது, இலங்கைத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரம்கூடத் தர முடியாது என்ற திட்டவட்டமான மறுப்பாகவே மகிந்தாவின் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

mahinda rajabhakse 3- updatenews360

2005-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பு வலிமையாக இருந்தபோது, 13-வது சட்டத்திருத்தத்தில் கூறப்பட்ட அதிகாரங்களை விட அதிகமான உரிமைகள் தரப்படும் என்று ராஜபக்சே கூறியிருந்தார். இந்தியாவுக்கு மட்டுமின்றி பல நாடுகளுக்கும் பலமுறை இந்த உறுதியைத் தந்தார். இலங்கைத் தமிழர் படுகொலை நேரத்திலும் அந்த நாட்டை ஆதரித்துவந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், காங்கிரஸ்காரர்களும், விடுதலைப்புலிகளால்தான் இலங்கையில் பிரச்சினையென்றும், அவர்கள் இல்லாமல் போனால் ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகள் கிடைக்கும்; ஈழத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று பேசிவந்தனர். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என்றும் சிலர் கதைபேசி வந்தனர். விடுதலைப்பலிகள் அழிந்ததும் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவோம் என்று சொல்லிக்கொண்டவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அந்த நேரத்திலேயே விடுதலைப்புலிகளே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு அரண் என்றும் அவர்கள் அழிக்கப்பட்டால் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இதுதான் இப்போது நடைபெற்று வருகிறது. தமிழர் பகுதியில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். தமிழர் கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. போர் முடிந்து பத்தாண்டுகள் கழிந்தபின்னும் தமிழர் பகுதியில் தமிழர்களுக்கு எந்தவிதமான ஆட்சி உரிமைகளும் தரப்படவில்லை. எந்த விதமாக ஒடுக்குமுறைகளை எதிர்த்து புலிகள் தனிநாடு கேட்டார்களோ அந்த ஒடுக்குமுறைகள் அப்படியே இருக்கின்றன.

தமிழர்களை அழிப்பதை முழுவதுமாக ஆதரித்துவரும் சீனாவின் ஆதரவாளர்களான ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையில் ஆட்சியில் இருக்கிறார்கள். ராணுவத்துக்கே பலகோடி செலவிடுவதால் இலங்கைப்பொருளாதாரம் முற்றுலும் நிலைகுலைந்துள்ளது. இந்திய அரசிடமும் சீனாவிடமும் இலங்கை பல நூறு கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளது. இந்தியாவிடம் பெற்ற கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் திருப்பித்தர மேலும் அவகாசம் வேண்டும் இலங்கை அரசு கேட்டு வருகிறது.

modi_unga_updatenews360

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பேசினார். தமிழர்களுக்கு சம உரிமை, சம நீதி வழங்க வேண்டும் என்றும் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு கேட்டார் என்பதேயே இலங்கை அரசு மறுத்திருக்கிறது. சீனாவின் ஆதரவு தமக்கிருப்பதால் இந்தியாவைதெ துணிச்சலாக எதிர்க்கலாம் என்று ராஜபக்சே சகோதரர்கள் கருதுகிறார்கள்.
இலங்கைத் தமிழர் படுகொலை பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் தனித் தமிழ் ஈழம் அமைப்பது குறித்து தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு எட்டு மாதங்களே இருக்கும் சூழலில் இலங்கைத் தமிழர் உரிமைப் பிரச்சினையை அதிமுக மீண்டும் எழுப்பியுள்ளது. காங்கிரசுடன் திமுகவுக்கு கூட்டணி நீடிக்கும் என்பதால் தேர்தல் பிரச்சாரத்திலும் அது ஒலிக்கும் வாய்ப்பும் உள்ளது. மத்திய பாஜக அரசு தமிழர்களின் உரிமையைப் பெற்றுத்தரும் வகையில் அதிரடியாக செயல்பட்டால் தமிழ்நாட்டில் அதற்கு ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் மோடியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அனைவரும் தற்போது உற்றுநோக்கிவருகின்றனர்.

Views: - 5

0

0