“எல்லா கட்சி சட்டைகளையும் தயாராக வைத்திருங்கள்”.. மகேந்திரன், பத்மபிரியாவுக்கு ம.நீ.ம. பொளேர்!!!

10 July 2021, 6:37 pm
MNM - updatenews360
Quick Share

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து வெளியேறினர்.

திட்டமிட்டு காலியான கூடாரம்

அதன் துணைத் தலைவராக இருந்தவரும் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவருமான டாக்டர் மகேந்திரன், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே நடிகர் கமல் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்று நிர்வாகிகள் குழு கூட்டத்தில் நேரடியாக குற்றம்சாட்டி அவரிடமே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அக் கட்சியில் இருந்து நடையைக் கட்டினார்.

இதேபோல் சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட
கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளரும் சமூக ஆர்வலருமான
பத்மபிரியாவும் விலகினார்.

பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்ட ஒரு டஜன் முக்கிய நிர்வாகிகளும் மூட்டையை கட்டினர்.

என்ன பொறுப்பு

இவர்களில் டாக்டர் மகேந்திரன், சமூக ஆர்வலர் பத்மா பிரியாவும் அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்பாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். எஞ்சிய முக்கிய நிர்வாகிகள் அடுத்து வரும் சில நாட்களில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

திமுக இணைப்பு நிகழ்வில் பேசிய மகேந்திரன், “என்னுடைய அரசியல் பயணம் இரண்டரை வருடம்தான். நம்பிக்கையோடுதான் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தேன். ஆனால் அங்கே தலைமையின் நடவடிக்கைகள் சரியாக இல்லை. இந்த 2 மாதங்களில் திமுக அரசின் செயல்பாடு மக்களுக்கானதாக இருப்பதால் திமுகவுக்கு வந்திருக்கிறேன். எனக்கு கட்சியில் என்ன பொறுப்பு கொடுக்கவேண்டும் என்பது தலைவருக்கு தெரியும்!” என்று குறிப்பிட்டார்.

மகேந்திரனால் கவலை

முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, “தேர்தல் அறிவிக்கப் பட்ட போதே இவருக்காக ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் லேட்டாக வந்திருக்கிறார். என்ன ஒரு கவலை என்றால் தேர்தலுக்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் கோவையில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும். கொங்கு மண்டலத்திலும் நமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும். அப்போதே வந்து நம்முடன் சேர்ந்திருந்தால் அந்தக் கவலை இப்போது இல்லாமல் போயிருக்கும்” என்று பாராட்டினார்.

கோவை திமுகவினர் வட்டாரத்திலோ டாக்டர் மகேந்திரனை பற்றிய பார்வை வேறு கோணத்தில் உள்ளது.

“2016 தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக வென்ற ஒரே தொகுதி சிங்காநல்லூர்தான். 2021 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஓட்டுகளை கணிசமாக பிரித்ததால்தான் அந்த தொகுதியில் இம்முறை திமுகவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. அவர் முன்பே வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்று கூறுவதும் பொருத்தமற்ற ஒன்றாக உள்ளது” என்று முணுமுணுகின்றனர்.

இன்னொரு பக்கம், அவர்களுக்கு வேறு ஒரு கவலையும் ஏற்பட்டுள்ளது. திமுகவில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், கோவை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறும்போது மகேந்திரன் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதனால் கட்சிக்காக ஆண்டுக் கணக்கில் உழைத்தவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சலசலப்பும் கோவை திமுகவில் கேட்கிறது.

ஸ்ரீபிரியா கொந்தளிப்பு

மகேந்திரனும், பத்மபிரியாவும் திமுகவில் இணைந்ததால் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை பேச்சாளரும், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவருமான நடிகை ஸ்ரீபிரியா கொந்தளித்துப் போனார்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மறைமுகமாக நையாண்டி செய்யும் விதமாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் இடம்பெற்றது, இரண்டே இரண்டு வரிகள்தான் என்றாலும் நச்சென்று இருந்தது.

ஸ்ரீபிரியாவின் பதிவில், ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியின் நக்கல்போல் கோபமும் வெளிப்பட்டிருந்தது. “சட்டையை மாற்றுவதுபோல் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள். எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடனும் சட்டைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். மாற்றுவதற்கு வசதியாக இருக்கும்” என்று நறுக்கென ஒரு கொட்டு கொட்டி இருந்தார்.

பதவி ஆசை

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேர்தல் தோல்விக்கு பின்பு எங்கள் கட்சியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் வெளியேறினர். ஆனால் மகேந்திரனுக்கும் பத்மபிரியாவுக்கும் மட்டுமே திமுகவில் இணைவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம், இவர்கள் இருவருமே
30 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றதுதான். இவர்கள் வாங்கிய ஓட்டுகள், கமலுக்காக மட்டுமே கிடைத்தவை.

மேலும் தேர்தலில் குறைந்த ஓட்டுகள் பெற்று கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் திமுகவில் சேருவதற்கான காத்திருப்போர் பட்டியலில்தான் இன்னும் உள்ளனர். இந்த நிர்வாகிகள் எல்லாம் எந்தக் கட்சியில் இணைந்தாலும், பத்தோடு பதினொன்றாகத்தான் இருப்பார்கள்.
அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தில் கிடைத்த அளவிற்கு முன்னேற வாய்ப்பும் கிடைக்காது. மதிப்பும் இருக்காது. அதனால் எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய இரண்டாம் கட்ட முக்கிய நிர்வாகிகள், அவசரப்பட்டு முடிவெடுத்து வெளியேறி விட்டோமே என்று வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

பதவிக்கு பேராசைப்படுகிறவர்கள்தான், அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பார்கள். அவர்களை பதவி வெறியர்கள் என்று கூட சொல்லலாம். ஒரு கட்சியை தொடங்கிய உடனே, வெற்றி பெற்று உச்சாணிக் கொம்புக்கு, செல்வதைவிட படிப்படியாக முன்னேறி வெற்றி பெற்றால்தான் அரசியல் சுவைக்கும். மூன்றாண்டுகள் கூட ஒரு கட்சியில் இருக்க முடியவில்லை என்றால் இவர்கள் சேர்ந்த அந்தக் கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதனால்தான், எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடனும் சட்டைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். மாற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்று ஸ்ரீபிரியா கிண்டல் செய்திருக்கிறார். இதை தலைவர் கமல்ஹாசனின் கருத்தாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று பொங்கினார

Views: - 178

1

0