சபாநாயகரே முடிவு எடுப்பார்..! தலை தப்பிய ஓபிஎஸ் & கோ..! ஸ்டாலின் ‘ஷாக்’..!

14 February 2020, 12:33 pm
OPS - Stalin updatenews360
Quick Share

டெல்லி: சபாநாயகரே நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக கூறி ஓபிஎஸ்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளதால் அதிமுக முகாம் நிம்மதி அடைந்துள்ளது.

தமிழக அரசியலில் இன்று பரபரப்புக்கு பஞ்சமில்லாத நாளாக இருக்கிறது. அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இன்று சட்ட சபையில் தாக்கலானது. காலை 10 மணிக்கு அவையில் தாக்கல் செய்தார்.

இது ஒரு புறம் இருக்க…. அங்கே டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு வந்தது. பல நலத்திட்டங்களை இங்கே ஓபிஎஸ் படிக்க, படிக்க அங்கே விசாரணை உச்சக்கட்டத்தை எட்டியது.

வழக்கு விசாரணையின் போது பல முக்கியமான அம்சங்கள் பற்றி வாத, விவாதங்கள் நடைபெற்றன. வழக்கை தலைமை நீதிபதி பாப்டே மற்றும் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்தது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வதி பற்றி சபாநாயகரே முடிவெடுக்கலாம், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார், எனவே இவ்விகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதுவும் விதிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அறிவாலய முகாமை செமத்தியாக அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட வழக்கு. அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மிகப்பெரிய ஆயுதமாக பார்த்தது திமுக.

குறிப்பாக ஸ்டாலின் போகிற ஊர்களில், தோன்றுகின்ற மேடைகளில் அது கல்யாண மேடையாக இருந்தாலும் அங்கே இந்த 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தை பற்றி பேசி, சட்டத்தின் துணை கொண்டு இந்த ஆட்சியை அகற்றுவோம் என்று கூறி வந்தார்.

ஆனால் இப்போது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்திருக்கிறது ஸ்டாலின் தரப்பு.