திட்டத்தை மாற்றிய ஸ்டாலின் : அதிர்ச்சியில் திமுக MLAக்கள்!!
1 February 2021, 1:04 pmதேர்தல் பிரச்சார வியூகங்களை வகுத்து கொடுப்பதற்காக திமுகவின் அரசியல் ஆலோசகராக பீகார் மாநிலத்தின் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.
அவருடைய ‘ஐபேக் டீம்’ சென்னையில் நூற்றுக்கணக்கான பணியாளர்களுடன் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் 150 இளம் பெண்களையும், இளைஞர்களையும் அது பணிக்கு அமர்த்தி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் போன் மூலமே தொடர்புகொண்டு ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள திமுக நிர்வாகிகளை அடையாளம் ஐபேக் டீம் கண்டு வந்தது.
அந்தத் தொகுதியில் உள்ள பிற கட்சிகளை சேர்ந்த மற்றும் பிரபல சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வாயிலாகவும் அந்தந்த தொகுதிகளில் யார் தேர்தலில் நிறுத்தப்படுவார்கள்?
நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்றெல்லாம் தோண்டித் துருவி கேள்விகளை கேட்டு பொதுமக்களின் மனவோட்டத்தை ‘ஐபேக் டீம்’ அறிந்து கொள்ள முயன்றது.
ஆனால் இதற்கு சரியான பலன் எதுவும் கிடைக்கவில்லை. பலர் நாங்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்போம், இங்கு அதிமுக கூட்டணிதான் ஜெயிக்கும் என்று பதில் அளித்து அதை சமூக ஊடகங்களிலும் பரவ விட்டு திமுகவை கடுப்பேற்றினர்.
இது வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து கொண்ட ‘ஐபேக் டீம்’ ஜனவரி மாத ஆரம்பம் முதலே தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கியது.
சிறு நகரங்களிலும், குக்கிராமங்களிலும் மூலை முடுக்கெல்லாம் படையெடுத்து திமுக வேட்பாளராக யாரை நிறுத்தினால் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்ற அடுத்த கட்ட சர்வேயையும் தீவிரமாக எடுக்கத் தொடங்கியது.
தொகுதியில் உங்களுக்கு தெரிந்த திமுக நிர்வாகிகள் நான்கு பேரை சொல்லுங்கள் என்று கேட்டு அதை குறிப்பெடுத்தும் கொண்டது. இப்போது ஐபேக் டீம் இன்னும் படு சுறுசுறுப்பு காட்டுகிறது.
ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு என்னும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொகுதி வாரியாக நடத்துவதால் அங்கும் இந்த டீம் ரகசியமாக களமிறக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாலினின் புகார் பெட்டியில் மனுக்களை போட வரும் கட்சி தொண்டர்கள், பொது மக்களிடம் இவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் திமுகவில் செல்வாக்கு உள்ள பிரபலங்களை 2-வது ரவுண்டாக கணக்கெடுத்தும் வருகிறது.
இதை அறிந்த திமுக நிர்வாகிகள் அரண்டு போய் உள்ளனர்.
ஏற்கனவே ஸ்டாலின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புகார் பெட்டி வைத்து கோரிக்கை மனுக்களை வாங்குவார் என்று மாவட்ட செயலாளர்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். குறிப்பாக தேர்தலில் போட்டியிட நினைத்த நிர்வாகிகளின் சிந்தனை இப்படி இருந்தது.
ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் புகார் பெட்டி வைப்பதற்கான கூட்டம் நடத்த 10 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேரிடமாவது நேரடியாக மனுக்களை வாங்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட திமுக செயலாளர்கள் திண்டாடித்தான் வருகிறார்கள்.
இந்த நெருக்கடி காரணமாக பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் தங்கள் தொகுதி பக்கம் வராமல் போனாலும் கூட பரவாயில்லை என்று தற்போது இவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனராம்.
அதே சமயம், மாவட்ட செயலாளர்களுக்கு தற்போது ஒரு பெரிய நிம்மதி கிடைத்திருக்கிறது. முன்பெல்லாம் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றால் அதற்கான முழுச் செலவுகளும் அவர்களது தலையில்தான் விழும்.
அந்தத் தொகையை வசூலிப்பதற்குள் விழிபிதுங்கிப் போய்விடுவார்கள். ஆனால் தற்போது ஸ்டாலின் சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள், பொதுமக்களை திரட்டுவதற்கான எல்லா செலவையும் திமுக தலைமையே ஏற்றுக்கொண்டு உள்ளது, என்கிறார்கள். இதில் தலைக்கு 200 ரூபாயும் அடக்கமாம்.
100 நாட்களில் தீர்வு பிரச்சாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்த திட்டத்தின்படி தினமும் 4 தொகுதிகளுக்கு செல்ல ஸ்டாலின் முதலில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது காலையில் ஒன்று மாலையில் ஒன்று என 2 தொகுதிகள் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.
விரைவிலேயே களைப்பும், சோர்வும் அடைந்து விடுவதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் 2 தொகுதிகளாக குறைத்துக் கொண்டார் என்கிறார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதற்கு இரு காரணங்கள் உண்டு. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுக்கு இது ராசியான தொகுதி என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, ஸ்டாலினின் வலதுகரம் போன்றவர் என்பது.
இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டாவில் ஸ்டாலின் பேசினார். இந்த தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் நந்தகுமார். இவரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சிஷ்யர் என்று சொல்லலாம். கடந்த முறை நந்தகுமாருக்கு சீட்டு வாங்கி கொடுத்தது துரைமுருகன்தான்.
இம்முறை போட்டியிட தனக்கு சீட்டு கிடைக்காது என்பது துரைமுருகனுக்கு நன்கு தெரியும். அதனால் நந்தகுமாருக்கு அவர் இன்னொரு வாய்ப்பை உருவாக்கித் தரலாம் என்கிறார்கள்.
அதற்காகத்தான் ஸ்டாலின் பிரசாரம் செய்ய அணைக்கட்டு தொகுதியை துரைமுருகன் சிபாரிசு செய்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கத்திற்கும் சென்று ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு திமுக உடன்பிறப்புகள் வேறு ஒரு காரணத்தை கூறுகின்றனர்.
இந்த இரு தொகுதிகளிலும் திமுக நிச்சயம் போட்டியிடும். கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காது என்று அவர்கள் நம்புவதுதான், அது.
ஸ்டாலின் தெரிந்தவர்கள், மிக நெருக்கமானவர்கள் என்ற கோணத்திலும் தொகுதிகளை அணுகுகிறார். இன்னொரு பக்கம் திமுக போட்டியிடும் தொகுதிகளை அவர் உறுதி செய்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.
இந்த கண்ணோட்டத்தின்படி பார்த்தால் தற்போதைய எம்எல்ஏக்களில் 50 பேருக்கு தேர்தலில் சீட் கிடைப்பது கடினம்.
பிரசாந்த் கிஷோர் வேறு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது, இளைஞர்களுக்கு அதிக சீட் கொடுக்கவேண்டும் என்று ஸ்டாலினிடம் வற்புறுத்தி வருகிறார்.
அதே நேரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் புகார் பெட்டி பிரசாரம் என்னவாகும் என்றும் தெரியவில்லை.
இந்த நிலையில் ஸ்டாலின் தங்கள் தொகுதிக்கு வராமல் போனால் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காமல் போய் விடுமோ என்று தற்போதைய எம்எல்ஏக்களில் பலர் கலக்கமும் அடைந்துள்ளனர்.
‘இதுவரை கட்சிக்காக செலவு செய்த எதையும் முழுசா எடுக்க முடியவில்லை. 5 வருடங்களாக எம்எல்ஏவாக இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை’ என்று மனதுக்குள் வெதும்பும் இந்த எம்எல்ஏக்கள், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் வரை பதைபதைப்பில்தான் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
0
0