அடுத்தடுத்து தற்கொலை… வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்துக : தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி காட்டம்

Author: Babu Lakshmanan
14 September 2021, 12:30 pm
eps - kanimozhi suicide - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றவராவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை எனக் கூறி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தந்தையும் அவரை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி தேற்றியுள்ளார். எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வேள்விக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அதோடு, மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீட்தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும், குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

திமுக தனது அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு,மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 196

0

0