ராகுல்-உதயநிதி திடீர் சந்திப்பு: பொங்கலுக்குள் புகுந்த ‘அரசியல் ஆட்டம்’..!!

15 January 2021, 7:00 am
Rahul-Gandhi-Udhayanidhi-Stalin - updatenews360
Quick Share

தமிழர்களின் வீர விளையாட்டு, ஜல்லிக்கட்டு. பண்டைய தமிழகத்தில் சேர, சோழ பாண்டியர் மன்னர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இருந்தது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தக்க ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.

சங்க இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு ‘ஏறு தழுவுதல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. ஏறு என்றால் காளை மாடு அர்த்தம். தழுவுதல் என்றால் அடக்குதல் என்று பொருள். இந்தியாவில் முன்பு சல்லிக்காசு என்னும் நாணயம் புழக்கத்தில் இருந்தது.
இந்த நாணயங்களை பண முடிப்பு போல் கட்டி காளைகளின் கொம்புகளில் மாட்டிவிடுவார்கள். காளைகளை அடக்குபவர்கள் இந்த சல்லிக் கட்டை எடுத்துக் கொள்ளலாம். இந்த சல்லிக்கட்டுதான் காலப்போக்கில் மருவி ‘ஜல்லிக்கட்டு’ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதைப் பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பயணிகள் வருவதுண்டு. தற்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக அவனியாபுரம், பாலமேடு போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளும் பிரபலம் ஆகி விட்டன. இந்த இரண்டு ஊர்களும் கூட மதுரை மாவட்டத்தில் அமைந்தவைதான்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளிக்காசுகள்,
கார், மோட்டார் சைக்கிள், பிரிஜ், வாஷிங் மெஷின், டிவி, கட்டில், பீரோ என்று விலைமதிப்புள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்படும். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் இந்த பரிசுகள் கிடைக்கும்.

udhayanidhi stalin - updatenews360

சரி…இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே? இப்போது எதற்கு ஜல்லிக்கட்டை இவ்வளவு விரிவாக ஆராய வேண்டும்?…

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டில் சாதிப் பூசல்கள் தான் அதிகம் காணப்பட்டது. இந்த நிலைமை 2006க்கு பிறகு அப்படியே மாறிப்போனது.
ஜல்லிக்கட்டுக்குள் அரசியலும் புகுந்தது. திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி இந்த அரசியல் விளையாட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்று சொல்லலாம். 2007 முதல் 2014 வரை அலங்காநல்லூர் அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிக்கட்டுகளில் அவருடைய கைதான் ஓங்கியிருந்தது. இப்போதும் கூட அவருடைய பங்களிப்பை இந்த ஊர் ஜல்லிக்கட்டுகளில் பார்க்கலாம்.

இப்படி ஜல்லிக்கட்டில் அரசியல் புகுந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளில் இந்த விளையாட்டு நேரடி ஒளிபரப்பாகத் தொடங்கியதுதான்.
பரிசுகளை வழங்குவோரின் விவரங்கள் அறிவிக்கப்படுவது நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதால் அரசியல் கட்சியினர் விளம்பரம் தேடி ஜல்லிக்கட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.அது இன்றும் தொடர்கிறது.

raghul gandhi - updatenews360

இந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டிலும் இந்த அரசியல் ஆட்டத்தை காண முடிந்தது. இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த களத்துக்குள் எதிர்பாராமல் நுழைந்த இன்னொருவர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவர் இங்கு திடீரென வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் சுமார் அரை மணி நேரம் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். இதனால் இரு கட்சியினரும் போட்டிபோட்டு காளைகளை அடக்கியவர்களுக்கு பரிசுகளை வாரி வாரி வழங்கினர். ஜல்லிக்கட்டை கண்டுகளித்த ராகுல்காந்தி தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை இந்த வீர விளையாட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த விளையாட்டில் காளைகள் காயம் எதுவும் அடையவில்லை என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

ராகுல்காந்தி முதல்முறையாக ஜல்லிக்கட்டை பார்க்கிறார் என்பதை அவருடைய முகத்தில் தெரிந்த ஆவல், புன்னகை, சிரிப்பு, உற்சாகம் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் உதயநிதி இதற்கு முன்பு அவனியாபுரம் வந்து ஜல்லிக்கட்டு பார்த்திருப்பாரா? என்பது சந்தேகம் தான். ஆனாலும் அவரும் சில நேரங்களில் எழுந்து நின்று ஆரவாரம் காட்டினார். இதனால் குறிப்பிட்ட சில நேரம் காளைகளுக்கும், வீரர்களுக்கும் இடையே நடந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பில் ராகுலும் உதயநிதியுமே முக்கியத்துவம் பெற்றனர்.

இருவரும் பார்வையாளர்கள் மேடையை விட்டு சென்ற பிறகே காளைகளுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் மீண்டும் மவுசும், மரியாதையும் கிடைத்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு திடீர் விருந்தாளியாக உதயநிதி எப்படி வந்தார்? என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இருவரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்ய ஜல்லிக்கட்டு களத்தை பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உதயநிதியின் எதிர்பாராத அவனியாபுரம் வருகையின் மூலம் இரண்டு விஷயங்களை
யூகிக்க முடிகிறது.

திமுகவுடன் காங்கிரசை கூட்டணியில் சேர்க்கும் அதிகாரம் உதயநிதியிடம் வழங்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அளவிற்கு அதிகாரம் உதயநிதிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றால் மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும்போது உதயநிதியே முன்னிலை வகிப்பார் என்பதையும் அனுமானிக்க முடிகிறது. இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில்,

“காங்கிரசில் சோனியா தனது மகன் ராகுலை முன்னிலைப்படுத்துவதுபோல் திமுகவில் உதயநிதிக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆக, இனி திமுகவில் கனிமொழி உள்பட சீனியர் தலைவர்களுக்கு தொகுதிப் பங்கீட்டில் எந்த முக்கியத்துவமும் இருக்காது. அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும். கட்சியில் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிவிட முடியும் என்பது அவர்களின் பகல் கனவாகவே அமையும்.

ஸ்டாலின் திமுகவில் மூத்த தலைவர்களை நம்புவதை விட தனது மகன் உதயநிதி சொல்வதைத்தான் அப்படியே ஏற்றுக் கொள்கிறார், கேட்கிறார் என்பது அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் மூலம் உறுதியாக தெரியவந்திருக்கிறது. இல்லையென்றால், அவசர அவசரமாக மதுரைக்கு தனது மகனை ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கமாட்டார். இது,திமுகவில் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

கனிமொழிக்கு டெல்லியில் இருக்கும் செல்வாக்கை மட்டுப்படுத்தி உதயநிதியை முன்னிலைப்படுத்தும் திட்டமும் இதில் இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் திமுகவின் தலைவராக உதயநிதியை தேர்ந்தெடுக்க ஸ்டாலின் முனைப்பு காட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர்.

எது எப்படியோ, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மூலம் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது!

Views: - 5

0

0