“அங்க குறைச்சிட்டு எங்க தலையில கட்டுறாங்க!”டவுன் பஸ் கட்டண உயர்வால் புலம்பும் ஆண் பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 8:01 pm
Stalin Bus - Updatenews360
Quick Share

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியை மே 8-ம் தேதி அமல்படுத்தியது.
இந்த டவுன் பஸ்களில் நாளொன்றுக்கு 28 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

தேர்தல் அறிக்கையை மார்ச் 13-ம் தேதி திமுக வெளியிட்டபோது, டவுன் பஸ்களில் என்று பொதுவாகத்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.

DMK releases manifesto, promises 75% jobs for locals in Tamil Nadu, free  tablets

இந்த வாக்குறுதியால், பெண்களின் ஓட்டுகள் திமுகவுக்கு கணிசமாக கிடைத்ததை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் இலவச பஸ் பயண வாக்குறுதியை திமுக மட்டுமே அளித்திருந்தது.

அதேநேரம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்பு சாதாரண டவுன் பஸ்களில் என்ற முக்கிய நிபந்தனை சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக உள்ளூர் விரைவு பஸ்களில் அவசரப் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இப்படி சாதாரண டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் தமிழக அரசின் 8 போக்குவரத்து கழகங்களுக்கும், ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும், எனினும் பெண்களின் நலனுக்காக இந்த சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருந்தார்.

Free bus service rolled out - The Hindu

இந்த நிலையில்தான், அண்மையில் தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 59 ரூபாய் 15 காசு இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு போக்குவரத்து கழகங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 6700 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே கடந்த 10 வருடங்களில் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 42 ஆயிரத்து143 கோடி ரூபாய் என்று கூறப்பட்டிருந்தது. இந்த இழப்பை அரசு சரி கட்டுவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்ததால் பட்ஜெட்டில் பஸ் கட்டண உயர்வு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அப்படி உயர்வு எதுவும், அறிவிக்கப்படவில்லை.

தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் இன்னொரு முக்கியமான வாக்குறுதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு செய்யப்படும் என்பதாகும்.

Petrol, Diesel Prices On August 14: Petrol Price Drops To Rs 99.47 Per  Litre In Chennai

இதனால், பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு குறைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தமிழக பட்ஜெட் வெளியிடப்பட்டபோது பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் வரி குறைப்பு செய்யப்பட்டிருந்தது. டீசல் விலை குறைப்பு பற்றி எதுவுமே கூறப்படவில்லை.
இந்த நிலையில், போக்குவரத்துக் கழக பஸ்களில் பல வழித்தடங்களில் சாதாரண
டவுன் பஸ்களில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழகத்தில் விருத்தாசலம் கிளையில் இயக்கப்படும் ஒரு சாதாரண டவுன் பஸ்சில் கடந்த 13ம் தேதி காலை 9.19 மணி அளவில் சேப்லாநத்தம் என்ற கிராமத்தில் இருந்து, ஊமங்கலம் என்னும் கிராமத்திற்கு செல்ல ஆண் பயணிகளிடம் வழக்கமான 7 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மறுநாள், அதாவது14-ந் தேதி அன்று காலை 9.23 மணி அளவில் அதே வழித்தடத்தில், அதே பஸ்சில் சேப்லாநத்தம்-ஊமங்கலம் இடையே பயணம் செய்வதற்கு அதே ஆண் பயணிகளிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

“நேற்று 7 ரூபாய்தானே வாங்கினீர்கள் இன்று ஏன் பத்து ரூபாய் கேட்கிறீர்கள்” என்று பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட அவரோ, “நேற்று வரை இந்த பஸ் சாதாரண பேருந்து. இன்று முதல் விரைவு பேருந்து ஆகிவிட்டது. அதனால்தான் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் சொன்னபடிதான் நாங்கள் கட்டணம் வசூலிக்கிறோம். விரிவான காரணம் தெரியவேண்டும் என்றால் அதிகாரிகளை போய் பாருங்கள்” என்று அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார்.

அது எப்படி ஒரே நாளில் சாதாரண டவுன் பஸ், விரைவு பேருந்து ஆக மாறியது? என்ற காரணம் புரியாமல் அவசரமாக வேலைக்கு செல்லவேண்டியநிலையில் அந்தப் பயணிகள் வேறுவழியின்றி10 ரூபாய் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அதே பஸ்சில் தங்களுடைய பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

அதேநேரம், தங்களுக்கு ஏற்பட்ட கட்டண முரண்பாட்டை தகுந்த ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு ஆதரவாக நெட்டிசன்கள் தமிழக அரசை கலாய்த்துள்ளனர்.

TN govt rejects DMK's call on resolution against Centre | Deccan Herald

“பெண்கள் தலையில் பூ வைப்பதற்காக, எங்கள் தலைகளை மொட்டை அடிக்காதீர்கள் என்றும் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு ரகசியம் அம்பலம், நஷ்டத்தை இஷ்டத்துக்கு ஆண்கள் தலையில் சுமக்க வைக்கிறார்கள் என்றும் திமுக அரசு, தன் டெக்னிக்கை கிராம மக்களிடம் காட்டத் தொடங்கிவிட்டது… நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?… ஆண்கள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம்… எனவும் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

ஏற்கனவே இந்த மாதத்தின் தொடக்கத்தில், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமசேரி, காஞ்சிப்பாடி,திருவாலங்காடு, ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் ஓடும் சாதாரண டவுன் பஸ்களில் ஆண்களுக்கு குறைந்த பட்ச கட்டணமாக 5 ரூபாய் டிக்கெட் கொடுப்பதற்கு பதிலாக 10 ரூபாய் டிக்கெட் கொடுக்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.
இதுபற்றி ஊடகங்களில் தகுந்த ஆதாரங்களுடன் செய்தியும் வெளியானது. முதலில் இதை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மறுத்தனர். பூசி மெழுகினர்.

இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இந்த முறைகேட்டை கண்டித்தும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டார்.

Setback for OPS in home turf, HC sets aside brother's appointment as milk  coperative chief | Latest News India - Hindustan Times

அதில், “ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு, ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு, கூடுதல் கட்டண டிக்கெட் கொடுத்த நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் இந்த நிகழ்வுகள் நடந்து 2 வாரம் ஆவதற்குள் இப்போது விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழக டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விதி மீறல் அம்பலமாகி தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கத் தொடங்கியிருப்பது, இது தமிழகம் முழுவதும் பரவலாக நடக்கிறதோ என்கிற சந்தேகத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது.

SOP for transport crew: Be polite, assist women - DTNext.in

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “இது, இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கக்கூடிய விதிமுறை மீறல்கள் என்று கூறப்பட்டாலும் கூட இதில் பல கேள்விகளும் எழுகின்றன.
இதற்கு காரணம் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதுதான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தங்களுக்கு அதிகபட்ச சம்பள உயர்வு கிடைக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கும் கொண்டு வருவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த இவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நஷ்டம் பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது.

Free Bus Services For Women In Regular Fee Buses. Tamil Nadu Women Rejoice!  | Focus Chronicle

மேலும் பெண்களுக்கு சாதாரண டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் வசூல் வெகுவாக குறைந்து, அதைக் காரணம் காட்டி தமிழக அரசு ஊதிய உயர்வு அளிக்கும்போது சம்பளத்தை குறைத்து விடுவதற்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கிடப்பில் போடுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக நினைத்து இவர்கள் ஆண் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இன்னும் புதுப்புது டெக்னிக்குகளை நடத்துனர்கள் கையாள்வதாகவும் கூறப்படுகிறது. அதாவது மனைவி, மகளுடன் பயணிக்கும் குடும்பத் தலைவர்களிடமும் சிறுவர்களிடமும் தலைக்கு கூடுதலாக 3 ரூபாய் கட்டணம் வசூலித்தால் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்களாம். அதேபோல் சில வழித்தடங்களில் சாதாரண டவுன் பஸ்கள் நிற்கும் இடங்களில் விரைவு டவுன் பஸ்களையும் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.

MTC buses skip Koyambedu CMBT | Chennai News - Times of India

இதனால் இரட்டிப்பு கட்டணத்தை பெற முடியும் என்பது இவர்களின் கணக்காக உள்ளது. எனவேதான் அரசு உத்தரவிட்ட பிறகும் கூட ஆட்சியின் மீது இருக்கும் விசுவாசத்தால் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் தொழிற்சங்கங்களின் நடத்துனர்கள் மற்றும் அதிகாரிகள் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் விதமாக இப்படி நடந்து கொள்வதாக பேசப்படுகிறது.

பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைப்பதாக அறிவித்துவிட்டு போக்குவரத்து கழக சாதாரண டவுன் பஸ்கள் மூலம் அந்த இழப்பை சரிக்கட்டும் முயற்சியாக ஆண் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது அநியாயம்.

இப்படி விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நடத்துனர்கள் மீது இடைக்கால பணிநீக்க நடவடிக்கை எடுத்தால்தான், மற்றவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள்.

No scope for talks with Karnataka on Mekedatu: Tamil Nadu CM M K Stalin |  Deccan Herald

மாநிலத்தின் நிதி நிலைமையை சீரமைக்க நிதியமைச்சர் வரிகளை உயர்த்தியே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதனால் எப்படியும் 9 மாவட்ட ஊராட்சி தேர்தல், நகராட்சி தேர்தல் முடிந்த பிறகு மின் கட்டணம், பஸ் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, மோட்டார் வாகன வரி ஆகியவை உயர்த்தப்படும் என்பது நிச்சயம். அதுவரை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், நடத்துனர்கள் பொறுமை காத்தால் நன்றாக இருக்கும்” என்று அவர்கள்
குறிப்பிட்டனர்.

Views: - 342

0

0