அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.. வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பரபரப்பு உத்தரவு!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 12:49 pm
Quick Share

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றிய விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி,போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அவர் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, முறைகேடு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்து விட்டதாகவும், எனவே சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது,

எனவே, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பொறியாளர் தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்று கூறி, பணமோசடி தொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். மேலும், தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும், இரண்டு மாதங்களுக்குள் வழக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

Views: - 355

0

0