விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய வழக்கு : விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

20 January 2021, 2:23 pm
supreme_coaurt_updatenews360
Quick Share

டெல்லி : குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 57வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தாலும், மறுபுறம் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, குடியரசு தினமான வரும் 26ம் தேதி டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், டெல்லிக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், டெல்லி நகருக்குள் நுழைந்து பேரணியை நடத்துவதில் விவசாயிகளும் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். எனவே, டெல்லி நகருக்குள் பேரணி நடத்த அனுமதி கோரி டெல்லி காவல்துறையிடம் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மத்திய அரசின் வழக்கு மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான பிற வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மத்திய அரசின் இடைக்கால மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், முன்பு கூறியதை போல விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகளும் கூறி விட்டனர்.

Views: - 0

0

0