பாஜகவிடம் சரண் அடைகிறாரா, ஓபிஎஸ்?… திசை மாறும் தேர்தல் வியூகம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 7:28 pm
OPS
Quick Share

2022 ஜூலை 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சிகளின் சட்ட விதிகளுக்கு எதிரானது, அதில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் ஏறாத கோர்ட் வாசப்படியே இல்லை.

அத்துடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொது செயலாளர் தேர்தலையும் ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் தனது வழக்கில் ஓபிஎஸ் இணைத்துக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியும், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் அவருடைய மனுக்களை தள்ளுபடி செய்ததால் ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அவருடைய மனுவை அண்மையில் விசாரித்த சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கவில்லை.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் தற்போதைய நிலையில் அதில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை நீக்க உத்தரவு பிறப்பித்தால் அது, கட்சியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எங்களால் தலையிட முடியாது என்று கூறி ஓபிஎஸ் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

அதேநேரம் ஓபிஸ் தரப்பில் ஆஜரான பிரபல மூத்த வக்கீல் கே கே வேணுகோபால் சிவில் வழக்குகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடித்து தீர்ப்பு வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்து வழக்கை விரைவாக விசாரியுங்கள் என்றுதான் எங்களால் கூற முடியுமே தவிர குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தீர்ப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என்றும் கூறி விட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஓ பன்னீர்செல்வத்துக்கும் அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே சி டி பிரபாகர் ஆகியோருக்கும் அதிமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று இனி அவர்களால் உரிமை கொண்டாட முடியாத நிலையும் ஏற்பட்டுவிட்டது.

சிவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பிரதான வழக்கின் மீது எவ்வளவுதான் வேகமாக விசாரணை நடத்தினாலும் அதில் தீர்ப்பு வருவதற்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிடும். இதனால் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குள் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருமா என்பதே சந்தேகம்தான். அப்படியே வந்தாலும் அது ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைய சாத்தியமில்லை என்பதுதான் சட்டத்துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இதனால் ஓபிஎஸ் முன்பாக தற்போதுள்ள வாய்ப்புகள் மூன்றே மூன்றுதான். தனிக்கட்சி தொடங்குவது, டிடிவி தினகரனின் அமமுகவில் இணைவது, கடந்த ஏழு வருடங்களாக, தான் தீவிரமாக ஆதரித்து வரும் பாஜகவில் தனது இரு மகன்களுடன் ஐக்கியமாவது. இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஓபிஎஸ்-ம் அவருடைய ஆதரவாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

என்ற போதிலும், தான் அமைத்துள்ள உரிமை மீட்பு குழு கூட்டங்களை வருகிற 28ம் தேதி முதல் ஓபிஎஸ் மீண்டும் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கோவை, சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அவர் நடத்திய இந்தக் கூட்டங்களுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் மேலும் 15 மாவட்டங்களில் உரிமை மீட்பு குழு கூட்டங்களை எதற்காக அவர் நடத்துகிறார், என்பதுதான் புரியவில்லை.

அதேநேரம், டிடிவி தினகரன் கட்சியில் இணைவதற்கு ஓபிஎஸ் ஒருபோதும் விரும்ப மாட்டார். ஏனென்றால் அங்கே போனால் தினகரனுக்கு கட்டுப்பட்டது போல ஆகிவிடும். மேலும் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயதீப் இருவருக்கும் அவர் எதிர்பார்க்கும் தேனி, சிவகங்கை தொகுதிகள் கிடைப்பது கடினம் என்பதும் அவருக்கு தெரியும்.

தனிக்கட்சி தொடங்கினால் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ்சால் தனி சின்னத்தைக் கேட்டு பெற முடியும். ஆனால் தனிக் கட்சி தொடங்கினால் அது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்து பொதுக்குழு தொடர்பான சிவில் வழக்கு நீர்த்துப் போய்விடும்
என்ற பயமும் அவருக்கு உள்ளது.

அதனால் அவருக்கு உள்ள ஒரே நம்பிக்கை, புகலிடம் எல்லாமே பாஜகதான். நிச்சயம் அவரை அக்கட்சி அரவணைத்துக் கொள்ளும். ஏனென்றால் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய பின்பும் கூட பிரதமர் மோடியை ஓபிஎஸ் முழு மனதோடு தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

அதனால் எந்த தயக்கமும் காட்டாமல் பாஜகவுடன் தன்னை அவர் இணைத்துக் கொள்ளலாம். அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் கூட்டணி அமைக்கலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் மூலம் தனது இரு மகன்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கி விட முடியும். நிற்கும் தொகுதிகளில் டிடிவி தினகரன் கட்சியுடன் ஏதாவது மோதல் என்றால் அதை பாஜகவே தலையிட்டு சரி செய்து விடக் கூடிய வாய்ப்புகளும் அதிகம்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்களின் பார்வை இதுதான். “தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, நான் இன்னும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத்தான் இருக்கிறேன் என்று ஓபிஎஸ் உரிமை கோர முடியும் என்று சிலர் கூறுகிறார்கள்.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும், பொதுச் செயலாளர் தேர்தலும் செல்லும் என்பதன் அடிப்படையில்தான் தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை தனது இணையதள பக்கத்திலும் வெளியிட்டு அங்கீகரித்து உள்ளது. இப்போது உச்ச நீதிமன்றமும் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து இருக்கிறது.

இதனால் அதிகபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணையம் எதையும் செய்து விடாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டனர். இதனால் அதிமுகவின் இரட்டை இலையை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அது தப்பு கணக்காகவே இருக்கும்.

ஒருவேளை கட்சி எம்எல்ஏக்களை அதிக அளவில் தன் பக்கம் இழுத்தால் அதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எம்எல்ஏக்கள் தவிர அவரை நம்பி வேறு யாரும் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது இது சாத்தியமே இல்லாத ஒன்று.

அதேநேரம் ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதும், அது தொடர்பான விசாரணை அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் 9ம் தேதி வரை தினசரி நடக்க இருப்பதும் அதில் ஓபிஎஸ்க்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதுவும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

அதேபோல தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கும் ஓபிஎஸ்-க்கும், அவருடைய மகனுக்கும் தலைக்கு மேலே தொங்கும் கத்திதான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, ஓபிஎஸ்ஐ யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அவரும் காளையின் தும்பை பிடிப்பதை விட்டுவிட்டு வாலை பிடித்துக் கொண்டு இருக்கிறார். இது வீண் வேலை என்பது அவருக்கும் நன்றாக தெரியும்.

அவருடைய எதிர்கால அரசியலுக்கு தற்போதைய தேவை பாஜக மட்டுமே!
இதிலாவது ஓபிஎஸ் தாமதமின்றி துணிந்து முடிவெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 244

0

0