கனிமவள கொள்ளை… திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் இட மாற்றம் : நேர்மைக்கு கிடைத்த பரிசு…!

Author: Babu Lakshmanan
7 December 2021, 2:42 pm
Quick Share

நெல்லை : கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி அபராதம் விதித்த சப்-கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராதாபுரம் கூடங்குளம் இருக்கன்துறை பகுதியைச் சுற்றி பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்து வந்தது. மேலும், இரவு, பகல் பார்க்காமல் கல்குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகளை தகர்ப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இது போன்று சக்திவாய்ந்த வெடிகளினால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக வீடு இடிந்து உயிரிழப்புகளும் ஏற்படும் அவலம் நிலவி வருகிறது. அண்மையில், சீலாத்திகுளத்தில் கல்குவாரியில் வெடிவைத்த அதிர்வினால் வீடு இடிந்து விழுந்து ஒரு குழந்தை பலியானது. மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால், சாலைகளும் அடிக்கடி சேதமடைந்து விடுகின்றன.

மேலும், ராதாபுரம் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமவளங்கள் போலியான நடைச்சீட்டுகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு புகார்களின் அடிப்படையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, போலியான ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக கனிமவளங்களை எடுத்துச் சென்ற லாரிகளை பறிமுதல் செய்தார். மேலும், இருக்கன்துறையில் இசக்கியப்பன் என்பரது பெயரில் இயங்கும் ஒரு கல்குவாரியில் நடத்திய சோதனையில், 4 லட்சத்து 3 ஆயிரத்து 824 கனமீட்டர் கனிமவளம் நடைச்சீட்டின்றி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, அந்த நிறுவனத்திற்கு ரூ.20.11 கோடி அபராதம் விதித்தார்.

அதோடு, மாவட்ட எஸ்.பி.மணிவண்ணனுடன் இணைந்து திமுக முக்கிய புள்ளிகளின் பினாமியாக செயல்படும் பிரமுகர்களின் பெயர்களில் நடத்தும் குவாரிகளிலும் சோதனை நடத்தி அபராதத்தை விதித்து அதிரடி காட்டினார் சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி.

இதனால், ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகளின் பரிந்துரையின் பேரில், அண்மையில் சப்-கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது, லாரிகளை பறிமுதல் செய்ததால் எஸ்.பி. மணிவண்ணனும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் விஷ்ணுவையும் மாற்ற மேலிடத்திற்கு அழுத்தம் அளித்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்ற சரவணன், கல்குவாரி கனிமவள கடத்தல் பிரச்சனை தொடர்பாக தம்மை யாரும் சந்திக்க வரவேண்டாம் என பத்திரிகை அலுவலகங்களுக்கு தகவல் சொல்லி அதன்பின் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

நேர்மையான அதிகாரிகளை எந்தவித காரணமும் இன்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது ராதாபுரம் பகுதி மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்கும் போது, ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், சொந்தக் கட்சிகாரர்களின் லாபத்திற்காக, இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை பலிகடா ஆக்குவதா..? என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Views: - 264

0

0