தமிழக நிதியமைச்சரின் அதிரடி! விழிபிதுங்கி நிற்கும் அரசு ஊழியர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2021, 9:01 pm
தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏதாவதொரு போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதில் அவர்களது சம்பள உயர்வு பற்றிய கோரிக்கையை எழுப்பாமல் இருக்க மாட்டார்கள். அதேபோல போராட்டம் நடத்தும் காலகட்டம் பற்றியெல்லாம் அவர்கள் கொஞ்சமும் கவலைப் படமாட்டார்கள்.
1.3.2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் நீண்ட கால முக்கிய கோரிக்கை.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த அமைப்பினர் போராடியும் வருகின்றனர். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.
இந்த போராட்டங்களுக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் அதிகாரம், மே 17 போன்ற ஏராளமான சமூக செயற்பாட்டு அமைப்புகளும் அப்போது ஆதரவு தெரிவித்தன.
அதிலும் குறிப்பாக, 2019-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அரசு ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தமிழகத்தையே அதிர வைத்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இந்தப் போராட்டத்தை அவர்கள் தீவிரமாக முன்னெடுத்தனர். தேர்தலுக்குள் அரசு அடி பணிந்துவிடும் என்ற நம்பிக்கையில் துணிச்சலாக களத்திலும் இறங்கினர். ஆனால் அப்போதைய அதிமுக அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இப்பிரச்சனையில் சென்னை ஐகோர்ட்டு தலையிடும் அளவிற்கு நிலைமை வீரியமாக இருந்தது. பள்ளி பொதுத்தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற போராட்டங்கள் தேவையா? என்று மக்கள் எரிச்சல் அடைந்து கேள்வி எழுப்பும் நிலையும் ஏற்பட்டது.
ஐகோர்ட்டு அறிவுறுத்திய பிறகுதான் தற்காலிகமாக தங்களுடைய போராட்டத்தை அவர்கள் திரும்பப் பெற்றனர்.
கடந்த பிப்ரவரி மாத இரண்டாம் வாரம் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருந்த நேரத்திலும்
72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் தொடங்கினர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
அப்போது உளுந்தூர்பேட்டையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றும்” என்று உறுதி அளித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி அரசு பணிகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும் என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளித்திருந்தது.
இதனால் திமுக ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று 13 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இதன் மூலம் தங்களது 10 ஆண்டுகால போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என்றும் எண்ணினர்.
ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 3 மாதங்களாகியும் இது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழக அரசின் பட்ஜெட்டிலும் இது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 16-ம் தேதி, தங்களது கோரிக்கைகளை தமிழக அரசுக்கு நினைவூட்டும் விதமாக அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில்தான் தமிழக சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தேவை இருக்கின்ற நேரத்தில் வரியை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கம் நடத்த முடியாது. மிக கடினமான சில பிரச்சினைகளை நாம் ஒத்தி வைக்க வேண்டியுள்ளது. பழைய பென்ஷன் திட்டம், புதிய பென்ஷன் திட்டம் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் 3, 4 அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சென்றுவிட்டது. அதற்கான முடிவு எடுக்க முடியவில்லை.
ஏனென்றால் நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருக்கிறது. அதனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. பொதுவாகவே விலை அதிகரிப்பதால் அகவிலைப்படி உயர்கிறது. நிதிநிலையில் மோசமாக இருக்கிறோம். இதை வெல்வது கடினமான முயற்சி. சுலபமாக செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட 28% அகவிலைப்படி உயர்வை அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்கு தமிழக அரசு தள்ளி வைத்திருக்கும் நிலையில் நிதியமைச்சரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்துள்ளது.
அரசு கூறுவதை பார்த்தால், பழைய ஓய்வூதிய திட்டம் ஒரு போதும் நடைமுறைக்கு வராதோ என்ற அச்சத்தையும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இனி என்ன செய்வது என்று அவர்கள் விழிபிதுங்கியும், திகைத்தும் போயுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 50 லட்சம் பேர், வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்து விட்டனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிபவர்கள் 5, 6 மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார்கள். அதுவும் ஒட்டுமொத்தமாக வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை பார்ப்பதாகவும், அதற்கு தற்போது வாங்கும் சம்பளமே மிக மிக அதிகம் என்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
அதேபோல அரசு ஊழியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களை விட பல மடங்கு சம்பளம் வாங்குவதாக மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இதுபோன்ற சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி கோரி போராடினால் மக்களிடம் ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகமும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், ” நமது போராட்டத்தை வழக்கம்போல் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். இல்லையென்றால் இவ்வளவு காலம் நாம் போராடியதற்கு அர்த்தமே இல்லாமல் போகும்” என்று அந்த அமைப்பினரில் ஒரு சாரார் நிர்வாகிகளை வலியுறுத்தியும் வருகின்றனர்.\
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தயங்குவது ஏன்? என்பது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும் என்றும் அதை புதிய தொழில் முதலீடுகள் பெறுவதன் மூலம் ஈடுகட்டி விட முடியும் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதை அறிந்து தற்போது திமுக அரசும் அதை நிறைவேற்றத் தயக்கம் காட்டுகிறது.
இதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசும் உணர்ந்து இருந்தது. அதனால்தான் அப்போது அவர்கள் பிடி கொடுக்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக மட்டும் ஆண்டொன்றுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் போய்விடுகிறது. இதுதவிர ஓய்வூதியமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் அரசின் வருவாயில் 47% சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே போய்விடுகிறது.
அடுத்த சில ஆண்டுகளுக்குள் இது 1 லட்சம் கோடி ரூபாயை கடந்து விடும். இது 25 சதவீதத்துக்குள் இருந்தால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும் என்பது பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடு.
அப்படியென்றால் 5 ஆண்டுகளுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகலாம்.
அதேபோல அரசு அலுவலகங்களில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால் குறிப்பாக, வாகனங்களுக்கான செலவுத் தொகையை கணிசமாக குறைத்தால் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும்.
என்னதான் திமுக தேர்தலில் வாக்குறுதி அளித்து இருந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுமா? என்பது சந்தேகம்தான். அதுதான் தமிழக நிதியமைச்சரின் பேச்சிலும் தெரிகிறது. எனவே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவார்களா? என்பதும் கேள்விக்குறிதான்!” என்று எதார்த்தத்தை விளக்கினர்.
எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று களத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
0
0