தடுமாறும் தமிழக நிதிநிலை…? நிதிச் சுமையிலிருந்து தமிழகம் மீளுமா?

Author: kavin kumar
11 August 2021, 10:03 pm
Quick Share

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் நிதி நிலவரம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் மந்த நிலையில் இருந்ததாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அரசுக்கு எதன் மூலமெல்லாம் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவருடைய அறிக்கை ‘பச்சை’யாக அம்பலப்படுத்தி இருக்கிறது என்று ஒரு சிலர் வர்ணிக்கிறார்கள்.

அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பாக, அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கான சம்பளம் ஓய்வூதியம், அரசு அலுவலங்களுக்கான நிர்வாகச் செலவு, மின்கட்டணம் போன்றவற்றில் அரசின் பெரும்பகுதி வருமானம் போய்விடுகிறது என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தார்.அதாவது, மாநிலத்தின் மொத்த வருவாயில் 47 சதவீதம் இதில் காலியாகி விடுகிறது. இது, 25 சதவீத அளவிற்குள் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்பது பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடு.

மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கச் செலவில் ஒரு கிலோ மீட்டருக்கு 59 ரூபாய் 15 காசு இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பஸ் கட்டணம் உயர்வு செய்யப்படாதது, டீசல் விலை அதிகரிப்பு, நிர்வாக மேலாண்மையில் குறைபாடு, அதிகப்படியான ஊழியர்கள், ஓய்வூதியம் ஆகியவற்றால் மொத்த இழப்பு 42 ஆயிரத்து 143 கோடி ரூபாயாக உள்ளது. தினசரி இயக்க இழப்பு 15 கோடி ரூபாய். அதுவே ஆண்டுக்கு 5475 கோடி ரூபாய் என்று தெரிவித்திருக்கிறார். மின் துறையைப் பொறுத்தவரை ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் 36 காசு இழப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் மின்துறையின் தினசரி இயக்க இழப்பு 55 கோடி ரூபாய். அதாவது ஆண்டுக்கு 20 ஆயிரத்து 75 கோடி ரூபாய் நஷ்டம்.

இதுபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாததால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் கவலை தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாததால் தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய 2577 கோடி ரூபாய் வராமல் போய்விட்டது என்றும் குறைபட்டுக் கொண்டிருக்கிறார். எனினும், தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த விதம் குறித்து பொருளாதார வல்லுனர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். “நிதியமைச்சர் சட்டப்பேரவையில்தான், வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்திருக்கவேண்டும். மாறாக ஊடகங்கள் முன்பாக வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போதுதான் அதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் அது பற்றிய விரிவான வாதத்தை, கருத்தை வைக்க வாய்ப்பு கிடைக்கும்.

அரசும் தனது தரப்பு விளக்கத்தை உரிய முறையில் அளித்திருக்கும். ஆனால், இதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்று கூறியிருப்பதால்தான் அவர் சட்டப்பேரவைக்கு வெளியே வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அதை ஊடகங்களில் விவாதப் பொருளாக்கி இருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது. இது, பட்ஜெட் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாமல் ஊடகங்கள் முன்பு வெளியிடுவதுபோல் உள்ளது. இது முற்றிலும் தவறான நடைமுறை. எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என்று அந்த பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர். நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளையறிக்கை தமிழக அரசை திவால் நிலைக்கு கொண்டு வந்து விட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன், பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

கமல் தனது ட்விட்டர் பதிவில், “கஜனா காலி. எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இதுவெள்ளை அறிக்கை இல்லை மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்” என்று கேலி செய்து இருக்கிறார். ஹெச்.ராஜா தனது பதிவில், “தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது அரசு திவால் நிலைக்கு வந்து,டேஞ்சர் என்னும் சிவப்பு கட்டத்தை நெருங்கி விட்டதை குறிக்கும் விதமாக இருவரும் மஞ்சள் கடுதாசி என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “தமிழக அரசுக்கு கடந்த சில ஆண்டுகளில் வருவாய் கிடைக்காமல் போனதற்கு நிதியமைச்சர் பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் வழக்கு மேல் வழக்கு போட்டு சுப்ரீம் கோர்ட் வரை திமுகதான் இழுத்தடித்தது. இதனால்தான் முந்தைய அதிமுக அரசால் உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க முடியவில்லை. அரசுக்கு கிடைக்க வேண்டிய 2577 கோடி ரூபாயும் வராமல் போனது. ஆனால் தனது வெள்ளை அறிக்கையில் இந்த விஷயத்தில் அதிமுக அரசு தவறு விட்டதுபோல திமுக குற்றச்சாட்டு வைத்திருப்பது நல்ல நகைச்சுவை. முந்தைய அதிமுக அரசு 2018-ம் ஆண்டில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தின.

பேருந்து சேவை என்பது பொது மக்களுக்கானது. அதில் லாப, நஷ்ட கணக்கு பார்க்கக் கூடாது என்று அரசுக்கு அறிவுரையும் வழங்கின. இதனால் உயர்த்திய கட்டணத்தை குறைக்கவேண்டிய நெருக்கடிக்கு அதிமுக அரசு தள்ளப்பட்டது.அப்போது அறிவித்திருந்த கட்டண உயர்வு அப்படியே நடைமுறைக்கு வந்திருந்தால் அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சரி பாதியாக குறைந்து இருக்கும். இதேபோல் 2019-ம் ஆண்டு அப்போது அதிமுக அரசு சொத்து வரியை அதிகரித்தபோது, அதைக் கண்டித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தன. இதனால் அறிவித்த சொத்து வரி உயர்வை அப்போது அரசு கைவிட நேர்ந்தது.

இதேபோல் விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்த முனைந்தபோது அதையும் திமுக கடுமையாக எதிர்த்தது.இப்படி 600-க்கும் மேற்பட்ட பெரும் போராட்டங்களை அதிமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் சந்திக்க நேர்ந்தது. போலி போராளிகளும் களத்தில் குதித்து, மக்களை கொதி நிலைக்குதள்ளி அன்றைய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இன்று அந்த போராளிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இதுபோல் பல்வேறு கட்டண உயர்வுகளுக்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக போன்றவையும் பெரும் போராட்டங்களை நடத்தி முட்டுக்கட்டை போட்டதால்தான் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டது.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் வராமல் போய் விட்டது. அதுமட்டுமின்றி, எந்த நேரமும் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும், என்று 2017 ஏப்ரல் மாதம் முதல் 2019 ஏப்ரல் மாதம் வரை 2 ஆண்டுகள் தொடர்ந்து திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதற்காக மறைமுக முயற்சிகளிலும் ஈடுபட்டது. இதனால் தமிழ்நாடு தொழில் தொடங்க பாதுகாப்பற்ற மாநிலம் என்ற எண்ணம் முதலீட்டாளர்களிடையே உருவாக்கப்பட்டது. எனவேதான் தமிழகத்துக்கு வர வேண்டிய சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடு வேறு மாநிலங்களுக்கு திரும்பிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதனால் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத சூழலும் ஏற்பட்டது.

தமிழக அரசின் வருவாய் குறைந்தற்கு இவையும் காரணங்களாகும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவை எல்லாவற்றையும் ஆட்சிக்கு வந்தபின் திமுக தற்போது உணர்ந்திருக்கிறது என்பதைத்தான் அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை காட்டுகிறது. அதிமுக அரசு பல லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி, தாலிக்கு தங்கம், மிக்ஸி கிரைண்டர், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் என்பது போன்ற 40-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது, என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் எதை எதையெல்லாம் எதிர்த்து திமுக தீவிரமாக போராடியதோ, அந்த திட்டங்களையெல்லாம் செயல் படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறது. அதன் கூட்டணி கட்சியினரும், போலி போராளிகளும் என்ன செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 340

0

0