நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்..! மாணவர்களின் நலன் மீது தொடர்ந்து அக்கறை காட்டும் தமிழக அரசு

26 August 2020, 11:03 pm
Quick Share

சென்னை: நீட் தேர்வை நடப்பாண்டு முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் சூழலில், இன்றளவும் தமிழகத்தில் நீட் தேர்விற்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக அனைத்து தேர்வுகளும் ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சூழலில் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு தற்போதைய சூழலில் நடத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

நடப்பாண்டில் நீட் தேர்வை நடத்தகூடாதெனவும், நீட் தேதியை ஒத்திவைக்கவும் மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், பல் மருத்துவத்திற்கும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு அதனை கைவிட வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் போராடி வருகின்றன.

இந்த நிலையில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். பாதுகாப்பு உபகரணங்களுடன் தேர்வை நடத்தினாலும், பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. பெருந்தொற்று பரவி வரும் காலத்தில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதும் சவாலான பணியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 40

0

0