4 மடங்கு கட்டணத்தால் மூச்சு திணறும் தமிழக மக்கள்!! மின்வாரியம் கொடுத்த அதிர்ச்சி!

16 July 2021, 10:02 pm
Quick Share

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 70 நாட்களே ஆகிறது. என்றாலும் ஏதாவது ஒரு பிரச்சனை அரசுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.அது அரசுக்கு பெருத்த தலைவலியை தருவதாகவும் பெரும்பாலான நேரங்களில் மாறிவிடுகிறது.அதுவும் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த முக்கியமான வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் விதமாக அந்தப் பிரச்சனைகள் அமைந்து விடுகின்றன, என்பதுதான் இதில் விசேஷம். “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்பதாகத்தான் இருக்கும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி அத்தனை தலைவர்களும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலிலும் நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக முழங்கினர்.அப்போதைய அதிமுக அரசு மீது வசைமாரியும் பொழிந்தனர். இதனால் இந்த இரண்டு தேர்தல்களிலுமே திமுகவுக்கு வெற்றி எளிதில் கைகூடியது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி நீட் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய முடியவில்லை. திமுகவின் இந்த வாக்குறுதியை அப்படியே நம்பி நீட் தேர்வுக்கு தயாராகாத மாணவர்களின் பாடு, படு திண்டாட்டம்தான். அடுத்து, தமிழகத்தில் மாநிலம் முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டு. தற்போது கிராமப்புறங்களில் தினமும் 3 முதல் 5 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு மின்தடை உச்சத்தில் இருந்தபோது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மின்வெட்டுக்கு முக்கிய காரணம் அணில்கள்தான் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக இல்லாத இந்த அணில்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தது மட்டும் எப்படி தெரிந்தது? என்று இதை நெட்டிசன்கள் கலாய்த்தனர். சரி, சென்னை நகரில் புதைவட கம்பிகள் மூலம் தானே, மின் விநியோகம் நடக்கிறது? அங்கே எப்படி தொடர்ந்து மின்தடை? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியபோது, அதற்கு பூமிக்குள் மண்ணைக் குடையும் பெருச்சாளிகள்தான் காரணம் என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதுபோன்ற சின்னச்சின்ன நகைச்சுவைகளை எல்லாம் மக்கள் மறந்துபோய் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழக மக்களை மின்சாரம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.இது, மின்தடை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. மின்கட்டணம் தொடர்பான விவகாரம். அதுவும் மின்சாரத்தை போலவே பலத்த ‘ஷாக்’ அடிக்கும் சமாச்சாரம்.திமுக ஆட்சிக்கு வந்ததும், மாதாமாதம் மின்பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி தரப்பட்டது. 2 மாதத்துக்கு ஒருமுறை அளவீடு செய்யும்போது ‘சிலாப்’ மாறுவதால் மின் கட்டணம் அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு. அதையே மாதாமாதம் அளவீடு செய்தால் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மாதம் தோறும் 150 முதல் 200 ரூபாய் மிச்சமாகும் என்ற நம்பிக்கை மக்களிடம் எழுந்திருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு வேட்டு வைத்தவுடன் மின் கட்டணத்தை மும்மடங்கு, நான்கு மடங்கு என கூடுதலாக செலுத்தும் பரிதாப நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கு காரணம் கடந்த ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலால் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று அளவீடு செய்யாததுதான்.இதனால் ஒரு வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை 750 ரூபாய் மின் கட்டணம் வருகிறதென்றால் அது பெரும்பாலான வீடுகளில் அப்படியே இரு மடங்காகிவிட்டிருக்கிறது. இன்னும் பலரது வீடுகளில் இந்த கட்டணம் மும்மடங்காகி 2,500 ரூபாயை தொட்டிருக்கிறது.

அலுவலகங்கள், கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இன்னும் பலத்த அதிர்ச்சி. கொரோனா பரவலின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 45, 50 நாட்களுக்கு எந்தக் கடையும், அலுவலகமும் திறக்கப்படவில்லை. அப்படி இருந்தும் 25 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்தவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியவர்களுக்கு,1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தும்படி தகவல் வந்திருக்கிறது. மின்சாரத்தை தொட்டால்தான் ‘ஷாக்’ அடிக்கும் என்பார்கள். தற்போது மின் கட்டணத்தை பார்த்தாலே ‘ஷாக்’ அடித்து விடும் போலிருக்கிறது.

கொரோனா 2-ம் அலையால் தமிழகத்தில் கடந்த மே10-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டேதான் வருகிறது. கடந்த மே, ஜூன் மாதங்களில் தொற்று உச்சத்தில் இருந்ததால் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்யவில்லை. அதனால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்தது. புதிய நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டது. மேலும் ஜூலை மாதத்தில் மின்கட்டண பதிவு கணக்கீடு மீண்டும் மேற்கொள்ளப்படும் என தமிழக மின் வாரியம் அறிவித்தது.

அப்போது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு அதை  2 ஆக பிரித்து இலவச மின்சார ஒதுக்கீட்டை கழித்துவிட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்தான், ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் மூன்று, நான்கு மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். அதாவது 4 மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இப்படி அதிக கட்டணம் வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பாதிப்புக்கு உள்ளான நுகர்வோர் ஒருவர் கூறுகையில், “கடந்த மே மாதம் கணக்கீடு எடுக்கப்படாததால்,2019 மே மாத கட்டணப்படி 1100 ரூபாய் செலுத்துங்கள் என்று மெசேஜ் வந்தது. அதன்படி கட்டினேன். இந்த மாதம் ரீடிங் எடுக்கப்பட்டு 1500 யூனிட் என்று கணக்கிட்டு 6300 ரூபாய் கட்டும்படி தகவல் வந்துள்ளது’ என்று வேதனைப்பட்டார்.

அதாவது, மின்வாரியம் அறிவித்தபடி பெரும்பாலான நுகர்வோர் 2019 மே மாத கணக்குப்படி 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்கின்றனர். இந்த மாதம் மிக சமீபத்தில் எடுத்த 4 மாதக் கணக்கீட்டின்படி பலருக்கு 6000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும்படி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.இந்த கொடுமை ஒரு பக்கம் இருக்க, இன்னொருபுறம், கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தி இருப்பதாக கூறி, பல வீடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் வரை வைப்புத்தொகை கட்டும்படி மின்வாரியம் தகவல் அனுப்பி, நுகர்வோரின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது.இப்படி அடுத்தடுத்து மின்சார வாரியம் அளித்திருக்கும் அதிர்ச்சியால் தமிழக மக்கள் அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மின்வாரியத்தின் இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது. 4 மாதத்துக்கு கணக்கீடு செய்தால் இப்படி கட்டணம் தாறுமாறாகத்தான் வரும். ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அவர்களுடைய ஒரே பொழுதுபோக்கான டிவி பார்ப்பது, மின் விசிறிகள் எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பது போன்றவற்றால் மின் பயன்பாடு அதிகரிக்கத்தான் செய்யும்.எனவே மின் வாரியம் 2019-ம் ஆண்டு முழுவதும் நுகர்வோர் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளனர், அதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்தி இருக்கின்றனர் என்பதை கணக்கிட்டு அதன் சராசரி அளவை, கணக்கீடு எடுக்காத இந்த நான்கு மாதங்களுக்கு பயன்படுத்தி அதன்படி கட்டணம் வசூலிக்கலாம்.

ஏனென்றால் கடந்த ஆண்டும் கொரோனா பரவல் ஆண்டின் இறுதி வரை இருந்தது. அதனால் 2019-ல் செலுத்திய மொத்த கட்டணத்தின் அடிப்படையில் தற்போது மின் கட்டணத்தை செலுத்தும்படி கூறுவதுதான் நியாயமானதாக இருக்கும்.கடந்தாண்டும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து விட்டார்கள். இந்த ஆண்டும் ஊரடங்கால் அவர்கள் கையில் பணமின்றி பரிதவித்து வருகின்றனர். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் மூன்று மடங்கு நான்கு மடங்கு கட்டணம் செலுத்தும்படி கூறுவதும், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்ட நிலையில் கூடுதல் டெபாசிட் தொகை கட்டும்படி நெருக்கடி அளிப்பபதும் ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டனர். அதேநேரம் இப்படி மும்மடங்கு, நான்கு மடங்கு மின் கட்டணம் செலுத்தும்படி நுகர்வோருக்கு மின்வாரியம் நெருக்கடி கொடுப்பதில் அணில்களுக்கும், பெருச்சாளிகளுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்!

Views: - 221

0

0