தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் சாத்தியமா..?
19 August 2020, 11:09 amபல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பட்டி மன்றம்! நிர்வாக வசதிக்காக தென்தமிழகத்தில் இன்னொரு தலைநகரத்தை உருவாக்க வேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விவாதம் எதுவரைக்கும் போய்விட்டது என்றால், அந்த இரண்டாம் தலைநகரம் திருச்சியா அல்லது மதுரையா என்று குரல் எழுப்புவது வரை போய்விட்டது. அதாவது பட்டி மன்றத்திற்குள் இன்னொரு குட்டி மன்றம்.
சரி!! நாம் இந்த பிரச்சினையின் அடிப்படை அம்சங்களை ஆராய்வோம். இந்தப் பிரச்சினை உடனடியாக சூடு பிடித்ததற்கு என்ன காரணம்?
தென்கோடி தமிழகத்து மக்களுக்கு வடகோடித் தலைநகரான சென்னையை அணுகுவதில் உள்ள கடும் சிரமங்கள்தான் இந்த விஷயத்தின் மூல வேர்.
இந்தச் சிரமங்கள் தமிழக அரசால் உணரப்பட்டவைதான். எம்ஜிஆர் காலத்திலேயே தமிழகத் தலைநகரை திருச்சிக்கு மாற்றுவதற்கு ஒரு யோசனை முன்வைக்கப் பட்டது. ஆனால் அது ஏன் அப்படியே அடங்கிப் போயிற்று? ஏன்? நல்ல யோசனைதானே! அது ஏன் முன்னெழும்பாமல் முடங்கிப் போயிற்று? ஏன் – ஏன் – ஏன்?
ஏனென்றால், அந்த யோசனை செயல்படுத்தப்படுவதற்காக சொல்லப்பட்ட யோசனை அல்ல, என்கிற முகத்திலடிக்கும் பச்சை உண்மைதான் ஒரிஜினல் காரணம்.
அந்த எண்பதுகளில் நாட்டில் வறட்சி தாண்டவமாடியது. முதன் முறையாக தமிழகத்தில் மின்வெட்டு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கூடிப் போனது. எங்கு பார்த்தாலும் எதிர்ப்புக் குரல்கள்தான். மக்கள் அனைவருமே எதிர்ப்பு மனநிலையில் இருந்த போது, அவர்களின் எதிர்ப்புணர்வை அப்படியே டைவர்ட் செய்வதற்காக எம்ஜிஆர் எடுத்த அஸ்திரம்தான் “தலைநகர மாற்றம்”.
தலைநகர் மாற்றம் என்பது சாதாரணக் காரியம் அல்ல ; எப்படிப் பார்த்தாலும் மிகக் குறைந்த பட்சம் (1982ல்) ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஒட்டுமொத்த பட்ஜெட் பணத்தையும் செலவிட வேண்டும்.
தாங்குமா தமிழகம்?
ஆனாலும் தென்தமிழகத்தாருக்கு ஓர் அரசியல் அல்வா அளிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், இதை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே இது சபையில் வைக்கப்பட்டது. வாத பிரதிவாதங்கள் சூடு பறந்தன. மாற்றலாம், மாற்றக் கூடாது என்று தெருக்கள் தோறும் தீர்ப்பு எழுதப் பட்டது. ஊர்மக்கள் உதடுகளில் இதுவே பேசுபொருளாக உலா வந்தது.
பாவம், அன்றைய அரசியல் எதிரி கருணாநிதி, பேச்சற்றுப் போனார். இதை ஆதரித்தால், திமுகவின் அரசியல் கோட்டையான சென்னை, திமுகவைக் கைகழுவி விடும். எதிர்த்தால் தென்தமிழகத்தைத் தீண்டவே முடியாது. அதனால் நிலைகுலைந்து போனார் கருணாநிதி.
அவ்வளவுதான், அதைத்தான் எம்ஜிஆர் எதிர்பார்த்தார். அவருக்குத் தேவையான அவகாசம் கிடைத்து விட்டது. அதன் பிறகு மழை பொழிந்து வறட்சி நிலை மாறியவுடன், இந்தத் தலைநகர மாற்ற யோசனை அற்பாயுசில் மாண்டது.
அதேபோல் இப்போது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைநகர யோசனை, அவ்வளவாக செலவு பிடிக்காத யோசனைதான். இருந்தாலும் இதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏறத்தாழ தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் அதிமுக ஆட்சியில் எப்போதோ இதை செயல்படுத்தி இருக்கலாமே, இப்போது ஆட்சி முடியும் வேளையில் இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
தற்போது, இந்த விவகாரம்தான் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் எப்படி அணுகினாலும் சிக்கிக் கொள்வார்கள்.
எப்படியோ இது இன்றைய தவிர்க்க முடியாத பேசுபொருளாக ஆகிப் போனது.
சரி, உண்மையிலேயே அப்படியொரு மாற்றம் நிகழ்வது சாத்தியம்தானா?
சாத்தியம்தான்! ஏனெனில் எம்ஜிஆர் முன்பு சொன்னது போல, தலைநகரையே தகர்த்துக் கொண்டு வந்து மாற்றச் சொல்லவில்லை. இரண்டாவதாக ஒரு தலைநகரைத்தான் இவர்கள் முன்மொழிகிறார்கள். இதற்கு சில ஊழியர்கள் நியமனமும்,கட்டிட வசதியும் இருந்தாலே போதும். சென்னையின் நிர்வாகச் சுமை பாதியாகக் குறைந்து போகும்.
தென் தமிழக மக்களுக்கும் அநாவசிய அலைச்சலும், கால தாமதமும் தவிர்க்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய ஒரேயொரு விஷயம், இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு உண்மையான ஆர்வம் இருக்கிறதா என்பதுதான்.
ஒருவேளை வரும் தேர்தலில் அதிமுக வென்றால் கூட இந்தப் பட்டிமன்றத்திற்குள்ளே நிகழும் இன்னொரு குட்டி மன்றமான “திருச்சியா – மதுரையா” என்பதைக் காரணம் காட்டி இது கைவிடப் படலாம். ஆகவே அரசின் உண்மையான எண்ணம் தெரிந்தால் மட்டுமே இது நிகழுமா..? நிகழாதா என்பதைக் கூற இயலும்.
ஆனால், இந்த யோசனை மிக அருமையான யோசனையே! இதன் படி நடந்தால் தென்தமிழகத்தின் முக்கியத்துவமும் அதிகரிக்கும். அதேசமயம், சென்னையின் முக்கியத்துவமும் குறையாது.
எனவே, என்னதான் அரசியல் கணக்குகள் இருந்தாலும் கூட, இம்மாதிரி நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதே மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்குமான அதிகாரப் பகிர்வின் ஆரம்ப நடவடிக்கையாக அமையும்.
செயலாகுமா ? அல்லது நம் ஆசையில் மண் விழலாகுமா?
பொறுத்துப் பார்க்கலாம்.
0
0