ரூ.24 கோடியை ஏப்பம் விட்டது யார் ? அமமுக-தேமுதிக உச்சகட்ட மோதல்

10 April 2021, 9:45 pm
AMMK - DMDK - updatenews360
Quick Share

டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவுடன் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கடைசி நேரத்தில் தேர்தல் கூட்டணி அமைத்ததும் அக்கட்சி 60 தொகுதிகளில் போட்டியிதுவதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்தக் கூட்டணி உருவான போதே, இது கொள்கை ரீதியாக அமைந்தது அல்ல என பரபரப்பாக பேசப்பட்டது. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் நீடிக்க பேரம் பேசிக் கொண்டிருந்தபோதே தேமுதிக திரைமறைவில், திமுகவுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் திமுகவோ 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவோம் என்று கறார் காட்டியது.

அதனால் மீண்டும் அதிமுகவிடம் ஓடி வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக குறைந்தபட்சம் 21 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று முரண்டு பிடித்தது.
அதிமுக14 தொகுதிகள் தருவதாக கூறியதை ஏற்க மறுத்த தேமுதிக, டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.

Dinakaran - vijayakanth updatenews360

அதிமுகவிடமும், திமுகவிடமும் அதிக அளவில் வைட்டமினை எதிர்பார்த்து அது கிடைக்காமல் போனதால் தான், அமமுகவுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூட்டணி அமைத்துக் கொண்டார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக இருந்து வருகிறது. இந்த கூட்டணிக்காக தொகுதிக்கு 50 L வீதம் 60 தொகுதிகளுக்கும் 30 C பேரம் பேசப்பட்டு அந்த தொகை முழுவதுமாக தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை இரு தரப்பினருமே “எங்கள் கூட்டணியை இழிவுபடுத்தும் செயல் இது” என்று மறுத்தனர்.

இந்த நிலையில்தான், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த கையோடு வைட்டமின் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது,தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட 60 தொகுதிகளின் வேட்பாளர்களில் 3 பேருக்கு மட்டுமே இந்த 50 L முழுமையாக சென்றடைந்து இருக்கிறது என்ற விவரம் டிடிவி தினகரனுக்குதெரியவந்துள்ளது.

மற்ற வேட்பாளர்களை பொறுத்தவரை கடந்த மார்ச் இறுதியில் முதல் தவணையாக 5 லட்சம் ரூபாயும், ஏப்ரல் முதல் வாரம் 3 லட்ச ரூபாயும் தேமுதிக வேட்பாளர்களின் வங்கிக் கணக்கில் அதன் தலைமை செலுத்தியுள்ளதாக கூறுகின்றனர். மிச்சம் 42 லட்சம் ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் 24 Cயை யாரோ முழுவதுமாக ஏப்பம் விட்டு விட்டதுபோல் தெரிகிறது.

ஏற்கனவே, தனது கட்சி வேட்பாளர்களில் பலர் கடைசி ஒரு வாரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் அதிமுக வேட்பாளர்களுக்கு சாதகமாக ஒதுங்கிக் கொண்ட கடுப்பில் இருக்கும் தினகரன், இதை அறிந்ததும் கொதித்துப் போனார்.

TTV dinakaran 01 updatenews360

இந்த வைட்டமின் பற்றாக்குறை காரணமாகத்தான், தேமுதிகவில் 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்ட தகவலும் வெளியாகி உள்ளது. இந்த வேட்பாளர்கள் அதிமுக, திமுகவினரிடம் சரண் அடைந்துள்ளனர்.

மேலும் தேமுதிக வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தொகுதியில் சராசரியாக எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்கள் மூலம் கணக்கெடுத்தபோது பெரும்பாலானவர்கள் அதிக பட்சமாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவே செய்யவில்லை என்ற விவரமும் அவருக்கு தெரியவந்துள்ளது. இதில் 2 லட்சம் ரூபாய் ஒவ்வொரு வேட்பாளர்களின் கைப் பணம் ஆகும். இதைக் கேள்விப்பட்டதும் அவர் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

இதனால் பேசிய ஒப்பந்தத்தின்படி தான் கொடுத்த 30 Cக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடமும், சுதீஷிடமும் தினகரன் கணக்கு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருப்தி அளிக்கும் விதமாக பதில் எதையும் கூறவில்லையாம்.

ஏற்கனவே, தான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக, தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் 30 பேரை பிரேமலதா அழைத்துக் கொண்டதால் அமமுகவினர் போட்டியிட்ட தொகுதிகளில் பிரச்சாரத்திற்கு ஆளில்லாமல் தினகரன் தடுமாறிய நிலையில் தற்போது இந்த விவகாரமும் சேர்ந்து சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக அமமுக-தேமுதிக கூட்டணிக்கு 6 சதவீத ஓட்டுகள் கிடைத்தாலே அது பெரிய விஷயமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படலாம் என்று டிடிவி தினகரன் அச்சத்தில் இருக்கிறார், என்கின்றனர்.

இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி வைத்தது போல் தவறான முடிவை எடுப்பதால் இப்படி பொருளாதார நெருக்கடியில் தேமுதிக சிக்கிக் கொள்கிறது. நடிகர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால இந்த முறை இதுபோல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

அவருடைய மருத்துவச் செலவிற்கே மாதம் 5 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகிறது. அதனால்தான் தேமுதிக வேட்பாளர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வைட்டமின் L போய் சேரவில்லை.

இந்தநிலையில் விஜயகாந்தை காட்சிப்பொருளாக பிரச்சாரத்தில் முன் வைத்ததால் அது ஓட்டுகளை குறைப்பதற்கும் வழி வகுத்து விட்டது. அமமுக- தேமுதிக கூட்டணி 12 சதவீத ஓட்டுகளை பெற முடியும் என்றும் அதன் மூலம் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் தினகரன் உறுதியாக நம்பி இருந்தார்.

தற்போது இதில் பாதி கிடைத்தாலே ஆச்சரியம்தான். இதனால்தான் அவர் தேமுதிகவிடம் கணக்கு வழக்குகளை கேட்டு தோண்டித் துருவ ஆரம்பித்துவிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு இந்த மோதல் என்னும் விஸ்வரூபம் எடுக்கலாம்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

kamal_seeman - updatenews360

ஏற்கனவே ஏப்ரல் 6-ம் தேதி நடந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் கணிசமாக வாக்குகள் பதிவாகி உள்ளது என்ற தகவல் ஊடகங்களில் பரவிவரும் நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்காமலேயே இந்த தேர்தலை சந்தித்து இருக்கலாம் என்ற முணு முணுப்பு அமமுக நிர்வாகிகள் மட்டத்தில் சற்று பலமாகவே கேட்கிறது!

அதேநேரம் தேமுதிகவின் ஒரு சில நிர்வாகிகளோ, பிரேமலதா மீதும் சுதீஷ் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “கட்சியின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிக தொகுதிகளில் போட்டியிட தேமுதிக விரும்பியது. அதனால் தான் கட்சித் தலைமையும் உறுதியாக இருக்கிறது என்று நம்பினோம். நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிமுக கூட்டணியிலேயே நீடித்து இருந்தால், நிச்சயம் 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும். கட்சியின் மானமும் காப்பாற்றப்பட்டிருக்கும்” என்று புலம்பினர்.

Views: - 23

0

0