யாருடன் கூட்டணி ? குழப்பத்தின் உச்சத்தில் பா.ம.க…!!!

23 January 2021, 7:25 pm
PMK - cover updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் சரி, அது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் என்றாலும் சரி, பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் சிறு சிறு கட்சிகள் கடைசி நேர சவாரியை மட்டுமே விரும்பும். இதில் அவசரப்பட்டு பந்திக்கு யாரும் முந்திக்கொள்ள மாட்டார்கள்.

கடைசியாக பிரதான அணிகளில் கூட்டு சேருபவர்களுக்கு மட்டுமே அறுசுவை விருந்து அளிப்பது மாதிரியான மதிப்பும், மரியாதையும் அதிகமாக கிடைக்கும். சீட்டும் வளமாக வந்து சேரும். முதலிலேயேபோய் ஒட்டிக் கொள்பவர்களுக்கு பழைய சோறுதான் பரிமாறப்படும் என்பது அரசியலில் எழுதப்படாத விதி.

இது எல்லா கட்சிகளுக்குமே பொருந்தக்கூடிய ஒன்றுதான். தமிழக அரசியலில் இந்த நிலைப்பாட்டை பின்பற்றுவதில் முதன்மையான கட்சி என்று பாமகவை சொல்வார்கள். அதற்கேற்ப அக்கட்சியின் தேர்தல் நேர செயல்பாடுகள் அமைவதைக் காண முடியும். பெரும்பாலும் மதில்மேல் பூனையாக இருந்து கடைசி நேரத்தில் அணி சேர்வதுதான் பாமகவின் சாதுர்ய காய் நகர்த்தல் அரசியலாக இதுவரை இருந்து வந்திருக்கிறது.

சில நேரங்களில் இந்த முடிவு பாமகவுக்கு வெற்றியையும், சில நேரங்களில் தோல்வியையும் தந்திருக்கிறது என்பதை, அதன் கடந்த கால தேர்தல் வரலாறு மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், பாமகவின் இந்த பாரம்பரிய அணுகுமுறை தற்போது நிச்சயமாக மாறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் மிகப் பெரிய ஆளுமை சக்திகளாக திகழ்ந்த ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத நிலையில் பாமகவின் இந்த நிலைப்பாடு அரசியல் விமர்சகர்களால் புதிய கோணத்தில் பார்க்கப்படுகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, இருப்பதைப் போலவே பாமகவும் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த மாதம் ஒரு புதிய நிபந்தனையை வைத்தார். அதாவது வன்னியருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இதற்கு ஒப்புக்கொண்டால் அதிமுகவுடன் கூட்டணி என்று வெளிப்படையாகவே டாக்டர் ராமதாஸ் அறிவித்துவிட்டார்.

ramadoss updatenews360

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தால் மாநிலத்தில் கணிசமான அளவில் உள்ள கவுண்டர், தேவர், நாடார் போன்ற வகுப்பினரும் இதே கோரிக்கையை எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக 200 சதவீதம் வரை அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படும்.

எனவே இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இதே நிபந்தனையைத்தான் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தும் திமுகவிடமும் பாமக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை திமுக ஏற்குமா? என்பது சந்தேகமே. பரிசீலிக்கிறோம் என்று கூட அக்கட்சியால் சொல்ல முடியாது. அப்படியொரு உறுதிமொழியை அளித்துவிட்டால் எல்லா சாதி அமைப்புகளிடம் இருந்துமே எதிர்ப்பு கடுமையாக கிளம்பும்.

இது தேர்தல் நேரத்தில் பெரும் தலைவலியை உருவாக்கும். கிடைக்கிற ஓட்டுக்கே வேட்டு வைத்துவிடும். இதனால்தான் திமுகவும், பாமகவை தங்கள் பக்கம் சேர்க்க தயக்கம் காட்டி வருகிறது.

சரி இந்த நிபந்தனையின் பின்னணிதான் என்ன?…

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் அப்போதே அதிமுக கூட்டணியில் நீடிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகன் அன்புமணியும் வந்து விட்டதாக சொல்கிறார்கள்.

மேலும், அந்த தேர்தலுக்கு முன்பு மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன. அதுபோன்றதொரு சூழலில் பாமக நான்கைந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் ஆட்சி அமைப்பதில் அக்கட்சி நிச்சயம் பெரும் பங்கு வகித்திருக்கும்.
அன்புமணிக்கும் தேசிய அளவில் முக்கியத்துவமும் கிடைத்திருக்கும். ஆனால் இந்த எதிர்பார்ப்பு நடக்காமல் போய்விட்டது.

ramadass-and-anbumani - updatenews360

நாடாளுமன்ற மேலவையில் ஒரு எம்பி பதவி தருவதாக அளித்த வாக்குறுதியின்படி, அதிமுக அன்புமணியை எம்பி ஆக்கியது. அதன் பிறகும் கூட தேசிய அரசியலில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் பதவியும் வாங்கித் தரவில்லை என்ற கோபமும் அதிமுக மீது ராமதாசுக்கு உள்ளது. இதனால் அதிமுக மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார் என்கிறார்கள்.

அதுதான் தற்போது வெளிப்பட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். எனவேதான் யாராலுமே நிறைவேற்ற முடியாத ஒரு கடும் நிபந்தனையை அவர் அதிமுகவிடம் வைத்திருக்கிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

‘நாம் இல்லாமல் வடமாவட்டங்களில் அதிமுக வெற்றி என்பதையே நினைத்து பார்க்க முடியாது. அதனால் அதிமுக நிச்சயம் இறங்கி வரும்’ என்றே ராமதாஸ் கருதினார். அதன் காரணமாகவே தைலாபுரத்தில் தன்னை சந்தித்த அதிமுக அமைச்சர்களிடம் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் பாமக வைத்த நிபந்தனைகளை அதிமுக ஏற்கவே இல்லை. இதனால் தனித்து போட்டியிடுவது என்கிற முடிவிற்கு பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அதை உறுதி செய்யும் விதமாக அண்மையில் கட்சி நிர்வாகிகளிடம் இணைய வழியில் பேசிய டாக்டர் ராமதாஸ் தனித்துப் போட்டியிடலாம் என்கிற யோசனையை தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு பாமக நிர்வாகிகள் அதிர்ந்துபோனார்களாம்.

இதுபற்றி பெயரை வெளிப்படுத்த விரும்பாத பாமக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் “இந்த நிபந்தனைகளை டாக்டர் இப்போது வைத்திருக்கக்கூடாது. இதனால் திமுக பக்கமும் போக முடியவில்லை. அதிமுகவையும் நெருங்க முடியாமல் குழப்பம்தான் ஏற்பட்டு உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? போராட்டம்.

அவர்கள் இதற்காக எந்த அளவிற்கு போக முடியுமோ, அந்த அளவிற்கு போய் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.

தேர்தலில் பணமும் நிறைய விளையாடும். வட மாவட்டங்களில் கூட நாம் நிச்சயம் ஜெயிப்போம் என்று கூற முடியாது. இரு பக்கமும் கடும் பாதிப்பை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அது யாருக்கு சாதகமாக அமையும் என்பதை கணிக்கவும் முடியாது. தேர்தலில் வெற்றி பெற்று பத்து, பதினைந்து பாமக எம்எல்ஏக்களை வைத்து கடும் அழுத்தம் கொடுத்து இருக்கலாம். எங்களுடைய நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் கூட விடுத்து இருக்கலாம்.

pmk ramadoss updatenews360

ஆனால் இப்போது திமுகவிடமும் போக முடியாது. அப்படி போனால் தயாநிதிமாறன் கூறியதுபோல பல நூறு கோடி ரூபாய் கைமாறியதாக அர்த்தமாகிவிடும். அதிமுகவிடம் நெருங்கினால் நிபந்தனைகளை மறந்து அடிபணிந்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழும். இப்போது பாமக தனித்துப் போட்டி என்கிற விஷப் பரீட்சைக்கு தள்ளி விடப்பட்டிருக்கிறது.
96-ல் இருந்தது போல் பாமக வலுவாக இருக்கிறது என்று டாக்டர் கருதுகிறார். ஆனால் போன முறையே தனித்துப்போட்டியிட்டதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. அப்போதும் நான்கு முனைப்போட்டி தான் இருந்தது.

இப்போதும் நான்குமுனைப் போட்டிதான் ஏற்படப்போகிறது. இதன் ‘ரிசல்ட்’ என்னவாக இருக்கும் என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது” என்று தங்களின் மனக் குமுறலை கொட்டினர்.

சரி, ஏன் ராமதாஸ் இப்படி அதிமுகவுடன் கறார் காட்டுகிறார்?
அதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், “அதிமுகவை தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்வார் என்று ராமதாஸ் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
கட்சியை கடந்து தமிழக மக்களிடமும் அவருடைய செல்வாக்கு பெருகி வருகிறது என்பது கண்கூடு. அதாவது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செல்வாக்கை கொண்டிருக்கும் தன்னை எடப்பாடி பழனிசாமி ‘ஓவர்டேக்’ செய்து விட்டதாகவே அவர் கருதுகிறார். இப்படியே போனால் எதிர்காலத்தில் ஜெயலலிதா அளவிற்கு அவர் பேசப்படுவார் என்பதும் அவருக்கு புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் எடப்பாடி பழனிசாமியின் அபார வளர்ச்சியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

இதுதான் அவர் அதிமுக அரசுக்கு வைத்துள்ள கடுமையான நிபந்தனைகளுக்கு முக்கியம் காரணம். தேவையற்ற இந்த நிபந்தனைகளை வைத்து விட்டு இப்போது டாக்டர் ராமதாஸ் தவியாய் தவிக்கிறார். இந்த தேர்தலில் அதிமுக தோற்க வேண்டும் என்பதே அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருப்பது போல் தெரிகிறது.

திமுகவுடன் சேரத் தயங்கினால் நீங்கள் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவுக்கு சேதத்தை உண்டாக்கலாம் என்று கூட திமுக தரப்பில் இருந்து பாமகவுக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கலாம் என கருதவும் இதில் இடமிருக்கிறது” என்று ராமதாசின் பிடிவாத்திற்கான ரகசியத்தை உடைத்தனர்.

வரும் 25-ம் தேதி பாமகவின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக அணியில் பாமக நீடிக்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு அன்று விடை கிடைத்து விடும்.

Views: - 6

0

0