மீண்டும் அரியணை ஏறும் எடப்பாடியார் : சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய கருத்துக் கணிப்பு.. கிலியில் திமுக..!!

10 April 2021, 6:25 pm
Eps - stalin - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒருவழியாக கடந்த 6ம் தேதி அமைதியாக, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து வருவதால், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க அதிமுகவும், எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டுமென்று திமுகவும் பலத்த போட்டியில் இறங்கியுள்ளன. இதுதவிர நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக-தேமுதிக கூட்டணி என்று மேலும் மூன்று அணிகள் களத்தில் உள்ளன. இத்தனை அணிகள் களத்தில் இருந்தாலும், அதிமுக – திமுகவிற்கான நேரடி மோதலாகவே இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

EPS - stalin - updatenews360

தேர்தல் அறிவித்த உடன் தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரபல தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் திமுக 150 முதல் 170 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அதிமுக 50 முதல் 70 இடங்கள் வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கை மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம், திமுக தலைவர்களின் அநாகரீகமற்ற பேச்சு உள்ளிட்டவற்றால், மக்கள் அதிமுக பக்கம் திரும்பியது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், 10 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கும், அதுமட்டுமில்லாமல் இளைஞர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு அறிவிப்புகளால், மக்கள் நிச்சயம் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என ஸ்டாலின் நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

CM - Updatenews360

இந்த நிலையில், தேர்தல் முடிந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்பின் விபரங்கள் வைரலாகி வருகிறது.

அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 113 இடங்களையும், திமுக 80 இடங்களையும் கைப்பற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 29 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவிற்கு 4 தொகுதிகளும், அதிமுகவிற்கு 8 தொகுதிகளிலும் முன்னிலைப் பெறும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குபடி பார்த்தால், 113 தொகுதிகளில் வெற்றி பெறும் அதிமுக, முன்னிலை கிடைக்கும் 8 தொகுதிகளில் 4 ல் வெற்றி பெற்றாலே ஆட்சியைக் கைப்பற்றி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெற்று, எடப்பாடியாரின் நல்லாட்சி தொடரும் எனக் கூறி அக்கட்சியினர் இந்த தகவலை பரப்பி வருகின்றனர்.

அதேவேளையில், 80 தொகுதிகளை கைப்பற்றும் திமுக, இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் 29 தொகுதிகளையும், திமுக முன்னிலை வகிக்கும் 4 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றினாலும் கூட 113 இடங்களே கிடைக்கும். எனவே, திமுக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பில்லை. இது திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது சாத்தியமில்லாத ஒன்று எனக் கூறி இந்த தகவலுக்கு பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.

DMK Stalin -Updatenews360

அதுமட்டுமில்லாமல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளும், திமுகவினரின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யமும், கிராமப்புறங்களில் நாம் தமிழர் கட்சியும், திமுகவிற்கு விழும் வாக்குகளை இழுத்துக் கொண்டுள்ளன. தற்போது, 72.78 சதவீத வாக்குகளே பதிவாகி இருப்பதால், இரட்டை இலைக்கு விழும் வாக்குகள் விழுந்தாலே மீண்டும் எடப்பாடியார் அரியணையில் அமர்ந்து விடுவார் என்றே அந்தக் கணிப்பில் தெரிய வருகிறது.

Views: - 46

11

1